23.12.2008.
சவுதி அரேபியாவில் வீட்டுப்பணியாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை எதிர்த்து பிரசுரிக்கப்படும் பத்திரிகை விளம்பரங்களில் ஒரு வீட்டுப்பணிப்பெண் கழுத்தில் நாய்ப்பட்டியுடன், நாய்க்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்றும், ஆடம்பரக் கார்களின் வெளிநாட்டு ஓட்டுனர் ஒருவரைக் குதிரை போன்று காண்பித்து அவரது கடிவாளத்தை ஒரு சவுதி அரேபியப் பெண் கையில் பிடித்திருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த பிரச்சார நடவடிக்கைகளில் சவுதி சமூகம் தவறாக காண்பிக்கப்படுவதாக அதன் விமர்சகர்கள் கூறுகின்ற போதிலும், அதில் காண்பிக்கப்படுவது போன்ற வன்முறைகள் வளைகுடாப் பிராந்தியத்தில் வழமையானவை என்று கூறுகின்ற உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள், எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண்பதற்கு அங்கு துஷ்பிரயோகமே முதல் நடவடிக்கையாக கடைப்பிடிக்கப்படுகின்றது என்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்தப் பிரச்சாரங்கள் சவுதிக்காரர்களை இதயமற்றவர்களாகவும், கொடூரமானவர்களாகவும் காண்பிப்பதாகக் கூறி, இவற்றை நிறுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சிலரும், விமர்சகர்கள் சிலரும் கோருகிறார்கள்.
ஆனால், வெளிநாட்டுப் பணியாளர்களை, குறிப்பாக வீட்டுப்பணிப்பெண்களை நடத்தும் விதம் குறித்து மனித உரிமைக் குழுக்கள் நீண்ட நாட்களாகவே வளைகுடா சமூகத்தை விமர்சித்து வருகின்றன.
இந்தப் பிரச்சாரங்களை நடத்தும் சவுதி நிறுவனத்தின், இயக்குனரான குஸ்வரா அல் கதீப் அவர்கள் இந்த பிரச்சார நடவடிக்கைகள் சரிதான் என்கிறார்.
சவுதிக்காரர்களால், வெளிநாட்டு பணியாளர்கள் எந்த அளவுக்கு தவறாக நடத்தப்படுகிறார்கள் என்பதை தான் தனது கண்ணால் நேரடியாகவே பார்த்ததாக அவர் ஒரு பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
அத்துடன் இந்தப் பிரச்சார நடவடிக்கையின் நோக்கம் சவுதி சமூகத்தை தனிமைப்படுத்துவது அல்ல என்றும், வளைகுடாவிலும், அரபுலகிலும் உள்ள இது குறித்த பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டுவதே அதன் நோக்கம் என்றும் அவர் கூறுகிறார்.
.