கொழும்பு கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையின் முடிவில், அலரி மாளிகைக்குப் பின்புறமாக சிறி மாரி அம்மன் கோவில் உள்ளது. 1920களில் இந்தப் பகுதியில், கொழும்பு மாநகரசபையினால், கொள்ளுப்பிட்டி தர்மகிட்யராமய விகாரைக்குப் பின்பாக, குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளர் சமூகத்தினரின் வழிபாட்டிற்காக 1930களில், இந்தக் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.
சலவைத் தொழிலாளர்கள் இலங்கையில் தாழ்த்தப்பட்டவர்களான பஞ்சமர்களுள் உள்ளடக்கப்படுகின்றனர்.
புலம் பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுகின்றோம் என்ற முகமூடிக்குள் மறைந்துகொண்டு இலங்கை அரசின் உளவுப்படைகள் போன்று செயற்படும் தன்னார்வ தலித் அமைப்புக்கள் இவ்வாறான சம்பவங்களைக் கண்டுகொள்வதில்லை.
மூன்று தல விருட்சங்களைக் கொண்டு 80 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தக் கோவில் கொள்ளுப்பிட்டிப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையிலேயே கொழும்பு மாநகரசபை இந்தக் கோவிலை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது. இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்தில் கொழும்பு மாநகரசபை வாகனத் தரிப்பிடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்தக் கோவிலை அமைக்க நவம் மாவத்தையில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த இடம், சலவையகப் பகுதி என்றும், அது கோவில் அமைப்பதற்குப் பொருத்தமான இடம் இல்லை என்றும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ருக்சன் பெரேரா தெரிவித்துள்ளார்.