Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வாதிகார ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்க முனையும் இலங்கை அரசு!

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை. மாறாக சர்வாதிகார ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே அதனை கோருகிறதென முன்னாள் எம்.பியும். ஐ.தே.கவின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் 112 அமைச்சர்கள் சிறப்புரிமைகளுடன் பதவியில் உள்ளனர். அப்படியாயின் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கையை எவ்வாறு குறைப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தமக்கு தேவையென்றும் அதனை மக்கள் வழங்கினால் அரசியலமைப்பை மாற்றியமைத்து தேர்தல்கள் முறைமையினையும் இல்லாதொழிக்க முடியுமெனவும் அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது.

எமது நாட்டு மக்களுக்கு இருக்கும் பிரச்சினை மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதிகாரமா என்பதையிட்டு நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே புதியதொரு பிரசாரத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

மக்களுக்குத் தேவை மூன்றில் இரண்டல்ல, வாழ்க்கைச் செலவு குறைப்பு, வரிகள் நீக்கம், தொழில் வாய்ப்புகள், அடிப்படை வசதிகளாகும்.

ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை பெற்றுக் கொண்டு ஆடைத் தொழிற்துறையைப் பாதுகாத்து ஒரு லட்சத்திற்கும் மேலான இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பைப் பாதுகாப்பது அவசியம். நாடும், மக்களும் இன்று அரசாங்கத்திடமிருந்து இவற்றையே எதிர்பார்க்கின்றனர்.

எனவே இப்பெரும்பான்மை அதிகாரத்தைக் கோருவது வேறெதற்காகவும் அல்ல. சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் 112 அமைச்சர்கள் சிறப்புரிமைகளை அனுபவித்துக் கொண்டு பதவிகளில் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராகப் பாரிய ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவ்வாறானதோர் நிலையிலும் இந்த அமைச்சர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அப்படியானால் எவ்வாறு நல்லாட்சியை ஏற்படுத்த முடியும்?

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக குறைக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது எவ்வாறு சாத்தியமாகும்?

இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் மாயாஜால வித்தைகளேயாகும்.

Exit mobile version