இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையார் நவனீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருபது பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் 74 முக்கிய விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையின் விபரங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கையின் ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் ஆராய்ந்து பதிலளிக்கும் முனைப்புக்களில் வெளிவிவகார அமைச்சு தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறான ஓர் உள்நாட்டு விசாரணைகளை கண்காணிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல், சட்டவிரோத தடுத்து வைத்தல்களை நிறுத்தல், சிறுபான்மை சமூகம், மதத் தளங்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்வேரை கைது செய்து தண்டித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை மேற்கொள்ளல்(மன்னார் மனித புதைகுழி உள்ளிட்ட), சர்வதேச தரத்தில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை ஒன்றை உருவாக்குதல், கடத்தல் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளல், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல், இராணுவ நீதிமன்றங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல், வெளிநாட்டு பிரதிநிதிகளின் விஜயங்களை தடுக்காமல் இருத்தல், மனித உரிமைப் பேரவையின் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்காமல் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பி;ல் இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.