இலங்கையில் போர் நடந்த வேளையில் அதிகாரத்திலிருந்த தொழிற் கட்சி இலங்கைக்கு பிரித்தானிய ஆயுதங்கள் வழங்கப்படுவதைக் கூட கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொழிற்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் எட் மிலிபாண்ட் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
இந்தப் போர் முடிவடைந்த மூன்று வருடங்களாகிவிட்ட போதிலும், இலங்கையினால் இந்த விடயம் குறித்து பொறுப்புக் கூறும் வகையிலான நம்பகமான புலனாய்வு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினால் விபரமாகக் கூறப்பட்ட மோசமான போர்க்குற்றங்கள் குறித்து புலனாய்வு செய்ய இலங்கை தவறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொறுப்புக் கூறலை முன்னெடுக்கவும், நல்லிணக்க நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவும் கனதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினாலேயே, இறுதிப் போர் நிகழ்வுகள் குறித்து ஒரு சர்வதேச, சுயாதீன விசாரணை தேவை என்று தாம் கோருவதாகவும் எட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே இலங்கைக்கு எதிரான அண்மைய ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானத்தை தாம் ஆதரித்ததாக தமது அறிக்கையில் கூறியுள்ள பிரிட்டனின் தொழிற்கட்சி, ஆகவே இலங்கை அரசாங்கம் தனது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஐநாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
இந்த விடயங்களில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாதபட்சத்தில், 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடக்கவிருக்கும், பொதுநலவாய அமைப்புக்களின் அரசாங்கங்களின் தலைவர்களின் சந்திப்புக்கு பிரிட்டன் பிரதிநிதிகளை அனுப்பும் விடயத்தை பிரிட்டிஷ் பிரதமரும், அரசாங்கமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.