Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனை நடைமுறைப்படுத்தப்படுமா?: பிருந்தா

 

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்த அரசியல் கட்சிகளினது முன்மொழிவுகளும் கலந்துரையாடல்களும் ஆரம்பித்து 3 வருடங்களின் பின்னர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற 128ஆவது கூட்டத்துடன் முடிவுக்கு வந்திருக்கின்றன.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவானது 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. அதாவது, இலங்கை இன நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதற்கென ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் வைத்தே இந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழு நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர் கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்தே அமைச்சரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரணவை (தலைவர் லங்கா சமசமாஜ கட்சி) குழுவின் தலைவராக தெரிவு செதனர்.

இதேநேரம், இந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுடன் இன்னுமொரு பிரிவாக நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இதில் நிபுணர்கள் குழு “ஏ’, “பி’ என இரு அணிகளாக பிரிந்து செயற்பட்டதுடன் இவ்விரு அணிகளும் சமர்ப்பிக்கும் அறிக்கைகளை ஆராந்து சட்சிகளிடையே புரிந்துணர்வையும் பொது இணக்கப்பாடொன்றையும் ஏற்படுத்துவதே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பொறுப்பாக இருந்தது.

இதற்கமைய நிபுணர்கள் குழுவின் இரு அணிகளும் சமர்ப்பித்த இரு முரண்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் திஸ்ஸ விதாரணவால் தயாரிக்கப்பட்ட ஆலோசனை ஆவணமொன்றை அடிப்படையாகக்கொண்டே கட்சி பிரதிநிதிகளிடையேயான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.

ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை தவிர பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளினது பிரதிநிதிகளும் பங்கு கொண்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு, இறுதியாக அதனது பிரதிநிதிகளுக்கிடையேயான கலந்துரையாடல்களை நிறைவு செயும் போது 13 கட்சிகளின் பிரதிநிதிகளை மட்டுமே பொது இணக்கப் பாடொன்றை எட்டுவதற்காக தன்னுள் தக்க வைத்துக் கொண்டிருந்தது.

அதிலும் தெற்கிலுள்ள பிரதான இரு எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் இதில் தொடர்ந்தும் பங்கு கொள்ளவில்லை. இதில், முதலில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சட்சிகளிடையே பொது இணக்கப்பாடொன்றை எட்டிய யோசனைக்கமைய தாங்கள் பேசத் தயாராக இருப்பதாக ஐ.தே.க. விலகிக் கொண்டதுடன் ஜே.வி.பி.யோ அதிகாரப் பகிர்வு என்ற விடயத்திற்கு இணங்கவே முடியாதென கூறி குழுவிலிருந்து இடை நடுவிலேயே வெளியேறிவிட்டது.

அது மட்டுமல்லாது சுமார் 90 சதவீதம் வரையான இணக்கப்பாடுகளை எட்டும் வரையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் பங்கு கொண்டு வந்து, இறுதியாக காணி, பொலிஸ் மற்றும் நீர் அதிகாரங்கள் மற்றும் அரசின் தன்மை போன்ற முக்கிய சிக்கலுக்குரிய 10 சதவீதமான விடயங்களில் பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்குள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லையென ஜாதிக ஹெல உறுமயவும் மக்கள் ஐக்கிய முன்னணியும் (மஹஜன எக்சத் பெரமுண) வெளியேறியிருந்தன.

இறுதியாக பிரதான பெரும்பான்மை கட்சிகளில் ஆளும் தலைமைக் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தொடர்ந்தும் இறுதி வரை அங்கம் வகித்து வந்தது. எனினும், பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த ஏனைய சிறு கட்சிகள் சில அதாவது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி போன்றன தொடர்ச்சியாக கூட்டங்களில் பங்கேற்று வந்ததுடன் ஐ.தே.க. விலிருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களின் கூட்டான ஐ.தே.க. ஜனநாயக குழுவும் அதில் இணைந்து கொண்டு இறுதி வரை கூட்டங்களில் பங்கேற்று வந்தது.

எவ்வாறிருப்பினும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் ஆரம்பம் தொட்டு உறுப்பினர்களாக இருக்கும் சிறுபான்மை கட்சிகள் இறுதிவரை தொடர்ச்சியாக கூட்டங்களில் பங்கேற்று வந்திருக்கின்றமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய தொன் றாகும்.

அதாவது இன நெருக்கடிக்கு ஏதாவதொரு வழியிலாவது தீர்வை எப்படி விட வேண்டுமென சிறுபான்மை கட்சிகளுக்கு இருக்கும் அக்கறை பெரும்பான்மையின கட்சிகளுக்கு இங்கு இல்லையென்பதை அல்லவா இந்த வெளியேற்றங்கள் எடுத்து காட்டுகின்றன. ஏனெனில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து கலந்து பேசி பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான குழுவிலிருந்தே முரண்பட்டு வெளியேறினால் பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான வழி என்னவென்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

அத்துடன் பல சிக்கல்களுக்கு மத்தியிலேயே சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தனது கலந்துரையாடல் கூட்டங்களை நிறைவு செதிருக்கிறது. அதாவது இடைக்கிடையே குழு கூட்டங்களை நடத்துவதில் ஏற்பட்ட தடைகளினால் ஜனாதிபதியே தலையிட வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

இதேநேரம், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் தங்களது நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமானதும்,சாத்தியமானதுமான விடயங்களை ஆராயும் பொருட்டு இந்தியா, வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் போன்ற இடங்களுக்கும் சென்று அங்குள்ள ஆட்சி முறைகள் மற்றும் அதிகார பகிர்வுகள் பற்றியும் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பெற்று வந்திருக்கின்றனர்.

குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்தியா சென்று அங்கிருக்கும் பஞ்சாயத்து முறை பற்றிய அனுபவங்களைக் கூட பெற்று வந்திருந்தார். இதன் பலனாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையில் பரிந்துரை செயப்பட்டிருக்கும் உள்ளூராட்சி மட்டத்திலான அதிகார பகிர்வின் போது இந்த பஞ்சாயத்து முறையை ஒத்த கூட்டமைப்பொன்றும் உள்வாங்கப் பட்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

அத்துடன், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனை திட்ட தயாரிப்பிற்கான கலந்துரையாடல்களின் போது இலங்கையில் தற்போது நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பு 2000 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஏற்படுத்தப்பட்ட யாப்பு நகல் மற்றும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஆகிய விடயங்களும் ஆராயப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது ஒரு புதிய அரசியலமைப்புக்கான அடிப்படை தத்துவங்களையும் பரிந்துரைகளையும் உள்ளடக்கியதாகவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத் திட்ட யோசனைக்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பதாக அதன் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதிலும் மாகாண சபை அடிப்படையிலேயே அதிகாரங்கள் பகிரப்பட்டாலும், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலும் பார்க்க இதில் பல புது விடயங்கள் உள்ளடக் கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம், உள்ளூராட்சி நிர்வாகம் ஆகிய 3 கட்டங்களாக அதிகாரங்களை பகிரும் வகையிலான தீர்வு யோசனைக்கு இணக்கம் கண்டுள்ள சர்வகட்சி பிரதிநிதிகள் குழு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மத்திய மற்றும் மாகாண மட்டங்களில் பகிரும் வகையிலான பரிந்துரைகளை முன்வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று, வந்த கட்சிகளின் முன்மொழிகளும் கலந்துரையாடல்களும் முடிந்து விட்டதனால், அதன் தீர்வு யோசனை திட்டத்துக்கான அனைத்து பணிகளும் பூர்த்தியடைந்து விட்டதாக அர்த்தப்படாது.

ஏனெனில் இனிமேல் தான் இதுவரை காலமும் இருந்ததை விட பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்கிடையே, சர்வகட்சி பிரதி நிதிகள் குழுவில் காணப்பட்டிருக்கும் இணக்கப்பாடுகள் பற்றிய சாராம்ச அறிக்கையொன்றை குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவிருக்கிறார். அத்துடன், இதுவரை இணக்கம் காணப்பட்ட விடயங்களடங்கிய இணைந்த அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு அது குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்த கட்சிகளின் தனிப்பட்ட அங்கீகாரங்களுக்காக வழங்கப்படவுள்ளது.

அந்த அறிக்கை சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குள் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே அது குறித்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக்கூட்டங்களில் இருந்து விலகியிருக்கும் ஐ.தே.க. மற்றும் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிராத தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களது யோசனைகளும் பெறப்படவிருக்கிறது. இதை பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

இதன் பின்னர் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின் அவை தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி கலந்து பேசி உரிய நடவடிக்கைகளை எடுத்ததன் பின்னரே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி தீர்வுத் திட்டயோசனை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப் படவிருக்கிறது. எனவே, இந்த இறுதி தீர்வுத் திட்ட யோசனையை சமர்ப்பிக்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை எவரும் நிச்சயமாக கூறிவிடமுடியாது.

இதேநேரம், இந்தத் தீர்வு திட்ட யோசனையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து விட்டாலுமே அது ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாட்டிற்கான ஒரு பரிந்துரையாக மட்டுமே கருதப்படும். இனி அடுத்த கட்டமாக அந்தத் தீர்வு திட்ட யோசனை தொடர்பில் சர்வகட்சி மாநாட்டில் கலந்து பேசி பொது இணக்கப்பாடொன்றையும் எட்ட வேண்டியிருக்கிறது. எனவே, இதன் அமுலாக்கம் என்பது இன்னும் நீண்ட தூர பயணமாகவே அமையப் போகின்றதென்ற ஐயம் எவருக்கும் ஏற்படுவதில் எந்தத் தவறும் கிடையாது.

ஏற்கனவே, அரசாங்கத்தினுள் இருந்துகொண்டே சர்வகட்சி பிரநிதிகள் குழுவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து விமர்சனங்களை வெளியிட்டு வரும் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுகந்திர முன்னணியினர் சர்வகட்சி மாநாட்டில் பங்கு கொள்ளும் போது, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்ட யோசனை தாடர்பில் என்ன மாதிரியான பிரதிபலிப்பை வெளிக்காட்டுவார்கள் என்பதில் இந்தத் தீர்வுத் திட்ட அமுலாக்கத்தை எதிர்பார்க்கும் எவருக்கும் சாதகமான எண்ணங்கள் இருக்க முடியாது.

அரசாங்கத்திற்குள்ளேயே பல முரண்பட்ட கொள்கைகளை கொண்டிருக்கும் கடும்போக்கு பங்காளி கட்சிகள் இருக்கும் வரை இனநெருக்கடி போன்ற விடயங்களுக்கு மிதவாத தன்மையுடனானதும், நெகிழ்வுப் போக்குடையதுமான தீர்வுகளை எதிர்பார்ப்பது மிக மிகக் கடினமே. ஏனெனில் கடும்போக்காளர்களையும் மீறி இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அது அவர்களது தேசப்பற்று பிரசாரத்துக்கும் வாய்ப்பேற்படுத்திக் கொடுப்பதாக போவிடும்.

அது மட்டுமல்லாது, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவையும் அதன் செயற்பாடுகளையும் ஜே.வி.பி.யும் எதிர்க்கிறது. எனவே, சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தற்போதைக்கு அதன் பிரதிநிதிகளிடையேயான கலந்துரையாடல்களை முடித்து விட்டபோதிலும் இனிவரும் காலங்களில் அதன் இறுதித் தீர்வுத் திட்ட யோசனையை சமர்ப்பித்து விட்டாலுமே அந்த யோசனையின் அமுலாக்கம் என்பது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலைகளுக்கமைய அது வெறும் கேள்விக் குறியுடன் மட்டுமே முடிவடைந்து விட்டாலுமே ஆச்சரியப்படுவதற்கில்லை.

Thanks:Thinakkural

Exit mobile version