சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தொடர்ந்தும் பங்குபற்றப் போவதில்லை என தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஜாதிக ஹெல உறுமய கூடிய விரைவில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை கூட்டுமாறு கேட்டுள்ளது. வடக்குக் கிழக்குப் பிரச்சினை தொடர்பில் அரசியல் கட்சிகளின் மாற்றுக்கருத்து குறித்து கலந்தாய்வு நடத்தி இணக்கம் ஒன்றுக்கு வர வேண்டிய பொறுப்பு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை இதனால் தொடர்ந்தும் கலந்துரையாடுவது பலனை தரக்கூடியது அல்ல என்பதே தமது கட்சியின் நம்பிக்கை என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு எழுதிய இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் முன்வைக்கப்பட்ட மாற்றுக் கருத்துக்கள் பொது மக்கள் முன்னிலையில் வைக்கப்பட வேண்டும் என்பதும் தமது கட்சியின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என கடும் நிலைப்பாட்டில் இருந்ததும் இந்த குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதற்கான பிரதான காரணமாக இருந்ததும் ஜாதிக ஹெல உறுமயவே, என்பது குறிப்பிடதக்கது.