Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வகட்சிக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது – திஸ்ஸ!:கையளிக்கப்படவில்லை – ஜனாதிபதியின் செயலாளர்!!

  அதிகாரத்தைப் பகிர்வதற்காக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையோ, அந்த யோசனைகள் அடங்கிய அறிக்கையின் சுருக்கமோ சர்வக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லையென அவரது செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சிக் குழுவின் கூட்டங்கள் நடைபெறும் விதம் தொடர்பான சாதாரண இடைக்கால அறிக்கை மாத்திரமே திஸ்ஸ விதாரணவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதாக வீரதுங்க கூறியுள்ளார்.

எனினும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களின் சாராம்சம் மூன்று  வாரங்களுக்கு முன்னர் தாம் ஜனாதிபதிக்கு வழங்கியதாகவும் அதனை ஆராய்ந்து தனது பதிலைத் தெரிவிக்குமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரியதாகவும் திஸ்ஸ விதாரண கூறியிருந்தார்.

ஜனாதிபதி அந்த அறிக்கையை ஆராய்ந்து இறுதி முடிவினைத் தெரிவிக்க சில காலம் தேவையென தானும் ஏற்றுக்கொள்வதால் அந்த சுருக்க அறிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் பதில் கிடைக்கும் வரை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டங்களை நடத்த முடியாது எனவும் திஸ்ஸ வித்தாரண தெரிவித்திருந்தார்.

திஸ்ஸ விதாரண வெளியிட்டுள்ள விடயங்கள் குறித்து ஜனாதிபதி செயலாளரிடம் கேட்டபோது, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைகள் உத்தியோகபுர்வமாக ஜனாதிபதிக்கு கிடைக்கவில்லை என்பதை தான் உறுதியாகக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் குழுவின் இறுதி அறிக்கையை கூடிய விரைவில் தன்னிடம் வழங்குமாறு திஸ்ஸ விதாரணவிற்கு தெரிவித்து வருவதாகவும் லலித் வீரதுங்க கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலாளரின் இந்த மறுப்பு தொடர்பாக திஸ்ஸ விதாரணவிடம் கேட்டபோது, ஜனாதிபதியிடம் இந்த அறிக்கையைக் கையளித்ததாகவும், இதனை உறுதியாகக் கூற முடியும் எனவும் பதிலளித்துள்ளார்.

Exit mobile version