Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரிந்துவிழும் பிரித்தானியா : மூடுவிழா நடத்தும் வியாபார நிறுவனங்கள்

பிரித்தானியாவில் கடந்த காலாண்டில் 500 இற்கு மேற்பட்ட வர்த்தக நிலயங்களுக்கு மூடுவிழா நடைபெற்றுள்ளது. பிரித்தானியப் பொருளாதாரம் சரிந்து விழுந்துகொண்டிருப்பதாக பல பொருளியல் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. சிறிய வியாபாரங்கள் அழிந்துகொண்டிருக்கும் அதே வேளை பல்தேசிய நிறுவனங்கள் பெரும் தொகையான பண மூலதனத்தை முடக்கிக்கொண்டு மூடுவிழா நடத்த ஆரம்பித்துவிட்டன. பிரித்தானியா முழுவதும் கிளைகளைக் கொண்ட நிழல்படத் துறையின் சில்லரை விற்பனை நிலையமான Jessops  கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி இலாபம் இன்மையை முன்வைத்து மூடப்பட்டது. 15ம் திகதி HMV என்ற இசை வியாபாரம் செய்யும் பல்தேசிய நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. பின்னதாக Blockbuster என்ற நிறுவனமும் மூடப்படப்போவதாக அறிவித்தது.

இந்த நிறுவனங்களில் வேலைசெய்யும் அண்ணளவாக பதினைந்தாயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர். திரைப்படங்களை வாடகைக்குவிடும் Blockbuster இல் வாடிக்கையாளர்கள் 3.5 பில்லியன் பவுண்ஸ் களை இதுவரை செலவு செய்துள்ள போதும் 250000 பவுண்ஸ்களை மட்டுமே இந்த நிறுவனம் வியாபாரவரியாகச் செலுத்தியுள்ளமையும் மூடுவிழாவின் போதே வெளிச்சத்திற்கு வந்தது.

2013 இல் ஒரு நாளைக்கு 20 சில்லரை வணிக நிறுவனங்கள் மூடப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியத்தின் உச்ச நிலையான நவ தாராளவாதம் இன்று தீர்வற்ற நிரந்தரமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. தற்காலிகமாக அரச கட்டமைப்பைப் பேணுவதற்காக மக்கள் மீது வரிச்சுமையைச் சுமத்தும் மேற்கு அரசுகள், வறுமைச் சமூகம் ஒன்றை உருவாக்கி வருகின்றன. சமூக நலத் திட்டங்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றிற்கு எதிராக அணிதிரளும் மக்களை ஒடுக்க புதிய பாசிச அரசுகளை உருவாக்குவதைத் தவிர வேறு வழிகளற்ற நிலைக்கு ஐரோப்பிய அமரிக்க நாடுகள் வந்தடைந்துள்ளன.

Exit mobile version