Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத், மகிந்த , அமரிக்கா : வெளியாகும் உண்மைகள்

அமரிக்காவின் தனிப்பட்ட அழுத்தங்களுக்கு அமையவே முன்னை நாள் இராணுவத்தளபதியும் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து இனப்படுகொலையை நிகழ்த்தியவருமான சர பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு குடியுரிமைகள் எதுவும் வழங்கப்படவில்லை. நீதியமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் சிறைச்சாலை ஆணையாளருக்கு 2011 மே 12ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ள (L/P/17/11 இலக்க) கடிதத்தில் இது உறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில் 34ஆவது அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய சரத் பொன்சேக்காவிற்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் 5311/2010 என்ற இலக்கத்தில் வெள்ளைக் கொடி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, இராணுவ நீதிமன்றில் 17.09.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றுக்கமைய சிறைவைக்கப்பட்டுள்ள சரத் சந்திரலால் பொன்சேக்காவிற்கு எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை மட்டுமே ஜனாதிபதி குறைத்துள்ளார்.

2012 மே 15ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனைக்கமையவே இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றமும், கொழும்பு மேல் நீதிமன்றமும் வழங்கிய மூன்று தீர்ப்புக்கள் இரத்துச் செய்யப்படவில்லை. எனினும், பொன்சேக்காவிற்கான எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளார்.

இந்த விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்காக வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக சரத் பொன்சேக்கா தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அந்த தீர்ப்புக்கள் சட்டரீதியாக தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன.

இதனடிப்படையில் அடுத்த ஏழு வருடங்களுக்கு சரத் பொன்சேக்காவினால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமைகளை வழங்காவிட்டாலும் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தும் நபராக செயற்படலாம் என இலங்கை அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார். தவிர, அவ்வாறான ஒரு நிலையே சரத் பொன்சேகாவை மகிந்தவின் மாற்றுக் கதாநாயகனாக மாற்றுவதற்கு உதவும் என அமரிக்காவும் மேற்கும் நம்புகிறது. இனிமேல் ஒரு இன்க்கொலையாளிக்கு எதிராக இன்னொரு இனக் கொலையாளி மக்கள் போராட்டங்களை நடத்துவதைக் காணலாம்.

Exit mobile version