Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார்:ரவுப் ஹக்கீம்

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று, திங்கட்கிழமை இரவு, கொழும்பில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தலைநகரில் அவரது அலுவலகத்தில் நுழைந்த ராணுவப் போலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச்சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா ராணுவக் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்று முதலில் அரசு தரப்பில் கூறப்பட்டது.

கைது செய்யப்பட்ட போது, சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறினார்.

ராணுவப்போலிசார் இந்த கைது குறித்து அப்போது எந்த காரணங்களையும் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூட்டத்திலிருந்த அரசியல் தலைவர்கள் கூறினர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் , திங்கட்கிழமை,
ஜெனரல் சரத் ஃபொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போது, தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

“எனக்கு தெரிந்தது, நான் கேள்விப்பட்டது, எனக்கு கூறப்பட்டது ஆகியவை குறித்து நான் அவசியம் வெளிப்படுத்துவேன். போர் குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உண்மைகளை சொல்லாதவர்கள் துரோகிகள். போர் குற்றங்களை செய்தவர்கள் யாரையும் நான் காப்பாற்றப் போவதில்லை”,
என்று தெரிவித்தார் ஜெனரல் சரத் ஃபொன்சேகா.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு போர் குற்றங்களை செய்தன என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

Exit mobile version