Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகாவின் ஆயுத கொள்வனவு மோசடி

அமெரிக்காவில் இயங்கி வந்த ஆயுத மோசடி நிறுவனமான ஐகொட் நிறுவனம் ஜெனரல் சரத் பொன்சேகாவினுடையது என்ற விடயம் தற்போது வெளியாகியுள்ளது. அவரது கிறீன் கார்டில் உள்ள விலாசமும் மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் விலாசமும் ஒன்றேயாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊழல் விடயங்கள் அவர் அரசியலுக்குள் பிரவேசித்ததன் பின்னரே வெளியிட்டுள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பில் விவாதிப்பதற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவோ அல்லது அவரது சார்பில் வேறு எவராயினுமோ தங்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தொலைக்காட்சியில் நேரடி விவாதத்துக்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ராஜித்த சேனாரத்ன மற்றும் விமல் வீரவங்ச எம்.பி. ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

விமல் வீரவங்ச எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலுக்குள் நுழைந்த கடந்த 40 நாள் பயணத்தின் ஊழல்கள் குறித்து நாம் பேசவில்லை. மாறாக அவர் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்தே நாம் விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தமது ஊழல் விடயங்களை மூடி மறைப்பதற்காகவே தற்போது வேறு பல கதைகள் கூறப்பட்டு அது இழுத்தக்கப்படுகின்றது. ஜனாதிபதியுடன் விவாத மேடைக்கு வரும் பட்சத்தில் செல்லூட் அடித்து விட்டே அமர வேண்டிய தேவை ஜெனரல் பொன்சேகாவுக்கு இருக்கின்றது. இந்த கௌரவப் பிரச்சினை காரணமாகவே விவாத விடயம் இழுத்தக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் குறித்து மக்கள் நன்றாக அறிவர். அவர்களின் இயக்கத்தில் செயற்பட்டு வருகின்ற ஜெனரல் பொன்சேகாவின் பின்னணி குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை.

யுத்தம் நடைபெற்ற காலப்குதியில்அமெரிக்காவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுத தளபாடங்கள் ஊழல் முறையிலேயே இடம்பெற்றுள்ளது. இந்த ஆயுதங்களை விநியோகித்த நிறுவனத்தின் பெயர் ஐகொம் என்றழைக்கப்படுகின்றது. இதனை இயக்கி வருவது ஜெனரல் பொன்சேகாவின் மருமகனாக இருந்தபோதிலும் அது பொன்சேகாவினுடையது என்பதற்கு எம்மிடம் நூறு வீதமான ஆதாரங்கள் உள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிறீன் கார்டில் உள்ள விலாசமானது 17545, கோல்ட் டிரைவ் எட்மன்ட் ஒக்லோ ஹாமா 73012 ஆகும். அந்த அட்டையின் இலக்கம் ஏ 055 090 192 ஆகும். மேற்குறிப்பிட்ட விலாசமே குறித்த நிறுவனத்தின் விலாசமுமாகும். இதேபோல் ஆவணங்கள் எம்மிடம் உள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஊழல் நடவடிக்கைகளால் இலங்கைக்கு மட்டுமல்லாது அமெரிக்காவுக்கு எதிராகவும் நடந்து கொண்டுள்ளார். இவ்விடயம் வெளிப்பட்டதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் மேற்படி ஆவணங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் வெல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் ஜெனரல் பொன்சேகாவின் ஊழல்கள் தொடர்பில் அறிந்திருக்கவில்லை. அவர், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னரே இந்த மோசடி விபரங்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 26ஆம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்கின்ற வாக்காளர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்த்தரப்பு வேட்பாளர் ஜெனரல் பொன்சேகா ஆகிய இருவர் குறித்தும் நன்கு ஆய்ந்தறிந்த பின்னரே வாக்களிக்க முற்பட வேண்டும். அதற்கு முன்னர் ஆயுதக் கொள்வனவு தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு ஜெனரல் பொன்சேகாவோ அல்லது அவர் சார்பில் வேறு ஒருவர் அல்லது இருவரையோ பயிற்சி கொடுத்து அனுப்புமாறு கேட்கிறோம்.

அத்துடன், தாம் விரும்புகின்ற தொலைக்காட்சியையும் அவர்கள் தெரிந்து எடுத்துக்கொள்ள முடியும். அதேநேரம், அந்த தொலைக்காட்சியில் இதனை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும் என்றார்.

Exit mobile version