Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகா இராணுவ நீதி மன்றில் விசாரணை : மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை!

இராணுவப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்ற விபரங்கள் உடனடியாக வெளிவராத போதிலும், அவரை இராணுவ சட்டதிட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு றோயல் கல்லூரி மாவத்தை, இலக்கம் 1/3 விலாசத்தில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்த வேளையில் இராணுவப் பொலிஸாரால் அவ்வலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு கடமையிலிருந்த ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மெய்ப்பாதுகாவலர், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வசமிருந்த ஆயுதங்களையே அவர்கள் முதலில் கைப்பற்றினர்.

இதனையடுத்து, அலுவலகத்திற்குள் உட்புகுந்த இராணுவப் பொலிஸõர் அவரைக் கைதுசெய்து விசேட வாகனத்தில் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டதுடன், இராணுவப் பொலிஸார் அவரது அலுவலகத்தை சுற்றிவளைத்தமையினால் அப் பகுதியிலுள்ள வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஜெனரல் பொன்சேகா கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.

அவர்களது பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஆயுதங்கள் அபகரித்துச் செல்லப்பட்டமையினால் அவர்கள் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலக அறையிலேயே பலமணி நேரமாகக் காத்திருந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஜெனரல் பொன்சேகா கைதுசெய்யப்படும் வேளையில் அவருடன் இருந்தவர்கள் இரவு 10.40 மணிக்குப் பின்னரே அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் இன்று அல்லது நாளை ஆஜர் படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இராணுவ குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தன்னை கைதுசெய்யவோ படுகொலை செய்யவோ திட்டமிட்டுள்ளதாக பொன்சேகா ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்த வேளையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் குற்றவியல் நீதி மன்றத்தில் மரண தண்டனை முறைமை நீக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இராணுவ நீதி மன்றத்திடம் இவர் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகாவிற்கு மரணதண்டனை  அல்லது  ஆயுள் தண்டனை வழங்கப்பட வாய்ப்புண்டு எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்தியா சீனா ஈரான் ரஷ்யா போன்ற நாடுகளுடனான இலங்கையின் கூட்டும்  அதற்கெதிரான அமரிக்க  ஐரோப்பிய நாடுகளின் உள்ளூர்ப் பிரதினிதியுமான சரத் பொன்சேகாவின் கைது   வல்லரசுப் போட்டியின் ஆடுகளமாக இலங்கை மாறியுள்ளதை மறுபடி நிரூபிக்கிறது.

Exit mobile version