Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சம்பூரில் மக்கள் போராட்டம் : தொடரும் திட்டமிட்ட இனவழிப்பு

samporமகிந்த ராஜபக்ச நீக்கப்பட்டு மைத்திரிபால சிரிசேன ஆட்சியைக் கைப்பற்றிய நிகழ்வின் சந்தடிகள் ஓய்ந்துபோகும் முன்னரே இந்திய அரசின் அழைப்பை இலங்கை ஏற்றுக்கொண்டது. மைத்திரிபால சிரிசேன இந்தியா சென்று இந்திய அரசுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றைக் கைசாத்திட்டார். இன்றுவரை அந்த ஒப்பந்ததின் அடிப்படைகள் என்ன என்பது யாருக்கும் தெரிவிகப்படவில்லை. நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட வேளையில் மகிந்த ராஜபக்சவுடன் சம்பூர் அனல் மின்னிலையம் குறித்துப் பேசினார். சம்பூர் அனல் மின்னிலையம் தனது கட்டுமானத்தை முடித்துக்கொண்டு இன்னும் இரண்டு வருடங்களுக்கு உள்ளாக மின் உற்பத்தியை வழங்க ஆரம்பித்துவிடும்.
நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி நடத்தவிருக்கும் சம்பூர் மின் நிலையத்தின் கார்பன் கழிவுகள் திருகோணமலையின் பெரும்பாலான பகுதிகளை மக்கள் வாழ்வதற்கு ஒவ்வாத பிரதேசமாக்கிவிடும். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த 2795 ஏக்கர் நிலப்பகுதி சம்பூர் நிலக்கரி மின்சாரத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது.
People’s Alliance for Right to Land (PARL) என்ற அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில், சம்பூர் நிலக்கரி மின் நிலையத்திற்காக 5000 ஹெட்டேர் பரப்புக் நிலம் இலங்கைக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 7200 கிராமவாசிகள் அங்கு வசிக்கின்றனர். அவர்கள் வெளியேறும் போது 2 லடசத்து 50 ஆயிரம் இலங்கை ரூபாக்களை வழங்குவதாக அப்பகுதி அரச அதிபர் பிரிவு அறிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கை போன்ற சிறிய நாட்டில் திருகோணமலை போன்ற சிறிய நிலப்பரப்பில் இந்த அளவு மிகப்பெரியது.
தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட 2200 மக்கள் இன்னும் முகம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். கோம்பைவெளியில் மாதிரிக் கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு அங்கு சிலர் குடியேற்றப்பட்டுள்ளனர். சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.
எல்லை வேலிகள் அமைப்பது தொடர்பான ஆயத்த கூட்டமொன்று நேற்று வியாழக்கிழமை அந்த பகுதியில் நடைபெறவிருந்த வேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக இறுதி நேரத்தில் திருகோணமலை நகருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
மூதூர் பிரதேசத்திலுள்ள நாவலடி சந்தியில் நடைபெற்ற அனல் மின் நிலையத்திற்கான எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பசுமை திருகோணமலை , மூதூர் பீஸ் ஹோம் உட்பட சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.
இந்த அனல் மின் நிலையம் தொடர்பாக இரு மாதங்களுக்கு முன்னர் சூழல் பாதுகாப்பு வாரியம் மக்கள் கருத்துக்களை கேட்டிருந்த போதிலும் அதனை மீறும் வகையில் அனல் மின் நிலையம் அமைக்க முற்படுவதாக பசுமை திருகோணமலை அமைப்பின் ஒருங்கிணப்பாளரான காளிராசா செந்தூரன் கூறுகின்றார்.
மக்கள் குடியிருப்பு பகுதிகளை அண்மித்த பகுதியிலே இந்த அனல் மின் நிலையம் அமைவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
அனல் மின் நிலையத்திற்கு எதிரான தங்களின் இந்த போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூவின மக்களும் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற வாக்குப் பொறுக்கிகள் இவையெல்லாம் தொடர்பாக துயர் கொண்டதில்லை. புலம்பெயர் நாடுகளில் சம்பூர் அவலம் பேசப்படுவதில்லை. ஊடகங்களும் புலம்பெயர் அமைப்புக்களும் பிழைப்பு நடத்துவதற்கு சம்பூர் பகுதி யாழ்ப்பாணம் போன்று பெரும் தொகை மக்களைக் கொண்டிராததும் ஒரு காரணமாகவிருக்கலாம்.

சம்பூர் உற்பத்தியின் வெப்பம் அப்பகுதி முழுவதையும் மக்கள் வாழ முடியாத இடமாக மாற்றிவிடும் என அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

512 மில்லியன் டொலர் கட்டுமானச் செலவில் இலங்கை அரசு 30 வீதத்தைச் செலவிடுகிறது. மேலும் 70 வீதம் வெளி நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. மின் உற்பத்தி முழுவதும் இந்தியாவின் முகாமைத்துவத்திலேயே இயங்கும் என அறிவிக்கப்பட்ட போதும் இந்திய அரசின் முதலீட்டுத் தொகை அறிவிக்கபடவில்லை.

இலங்கையில் இனவழிப்புக் குறித்துப் பேசியே பிழைப்பு நடத்தும் தமிழ் உணர்வாளர்கள், சம்பூர் அழிவைக் கண்டுகொள்வதில்லை. இலங்கை அரசு, சுன்னாகத்தில் ‘கதானாயகன் வேடம்’ போட்டுக்கொண்டு சம்பூரில் அழிப்பை நடத்த ஆரம்பித்துவிட்டது. இந்திய அரசு திருகோணமலையை மையமாகக் கொண்டு வடக்குக் கிழக்கை மட்டுமல்ல முழு இலங்கையையும் தனது பேரழிவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது.

சுன்னாகத்தில் மக்கள் பெற்ற வெற்றியை நம்பிக்கையாகவும் ஆதரமாகவும் கொண்டு சம்பூர் மின்னிலையத்தில் மேற்கொள்ளப்படும் அழிவுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் போராடுவதும் இன்றைய அவசரத் தேவையாகும்.

Exit mobile version