Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சம்பந்தன் மனோ இணைந்து கொண்ட தேசிய நிறைவேற்றுச் சபையில் இல்லாதவை

Ranil_Sampanthanதேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வட-கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள், தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள் உட்பட புதிய அரசாங்கத்தின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும்.

இந்த சபையின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வண. சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சம்பந்தன், மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதுதீன், சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க ஆகிய பதினோரு பேர் பணியாற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவைப் பயன்படுத்தி இலங்கையில் இனப்படுகொலை நடத்தி ஆயிரக்கணகான மக்களை ஏகாதிபத்தியங்கள் அழித்தன. புலிகளை அழித்த புகழை முன்வைத்து தனது சர்வாதிகார அரசை நிறுவிக்கொண்ட மகிந்த ராஜபக்ச புலிகளின் பின்னர் ஏகாதிபத்திய நாடுகளின் பல்தேசிய வியாபாரக் கொள்ளைக்கு சிறிய தடைகளை ஏற்படுத்தினார். கடந்த பத்தாண்டுகள் மகிந்தவை மிரட்டி தனது முதலீடுகளை உள் நுளைத்த ஏகாதிபத்திய நாடுகள் இன்று மைத்திரியை ஜனாதிபதியாக்கியுள்ளன.

தேசிய நிறைவேற்று அதிகார சபையின் வேலைத்திட்டத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பகல் கொள்ளை தொடர்பாக ஆராய்ந்து கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்புக்களும் எடுக்கப்படாது. அது குறித்துப் பேசுவதற்கு இலங்கையில் வெற்றிபெற்ற எவரும் தயாரில்லை.

தன்னார்வ நிறுவனங்கள், மனித உரிமை வாதிகள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள் என்ற தலைப்புக்களுடன் மகிந்தவிற்கு எதிராகக் குரல்கொடுத்த அனைத்துத் தரப்பினரும் ஏகாதிபத்திய சார்பு மைத்திரிபால அரசின் வேலைத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளனர். மைத்திரி அரசு திறந்துவிடும் பல்தேசியக் கொள்ளைக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதும் போராடுவதும் இன்று இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் கடமை.

மகிந்த அரசைத் தண்டிப்பதும், அரச பயங்கரவாதிகளை விசாரித்துத் தண்டனை வழங்குவதும் அவசியமானவையே. ஒடுக்கப்படும் மக்களின் எதிர்காலம் என்பது நூறு நாள் திட்டமல்ல. நீண்ட தெளிவான வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களை அணிதிரட்டுவதும் கொள்ளையடித்துச் செல்லப்படும் மக்களின் உடமைகளுக்கு எதிராகப் போராடுவதுமேயாகும்.

பல்தேசியக் நிறுவனங்களின் கொள்ளை தொடர்பான எந்த ஆய்வுகளும் முடிவுகளும் தேசிய நிறைவேற்றுச் சபையில் இல்லை. இச் சபையின் தோற்றம் என்பதே பல்தேசியக் கொள்ளைக்கான ‘ஜனநாயகத்தை’ வழங்குவதற்கானது.

Exit mobile version