சமூக சிந்தனையாளன்
இ.முருகையன்
மறைவிற்கு இறுதி அஞ்சலி
மூத்த கவிஞராகவும் இலக்கிய ஆற்றல்கள் நிறைந்தவராகவும் தமிழ் அறிஞராகவும் வாழ்ந்து வந்த இ.முருகையன் 27-06-2009 அன்று இயற்கையெய்தியமை நம் எல்லோருக்கும் பெரும் துயரமாகும். அவரது இழப்பு சமூக சிந்தனையாளர்களுக்கும் மக்கள் இலக்கியவாதிகளுக்கும் சமூக மாற்றம் வேண்டி நிற்கும் புதிய தலைமுறைப் படைப்பாளிகளுக்கும் பேரிழப்பாகும்.
கவிஞர் முருகையன் தனது ஆற்றல்கள் முழுவதையும் சமூகம், மக்கள், உழைப்போர், ஒடுக்கப்படுவோர் பக்கம் நின்றே வெளிப்படுத்தி வந்தார். அவரது எழுத்துக்களும் செயற்பாடுகளும் என்றுமே மேல் நோக்கி நின்றதில்லை. வெறும் புகழ், தன்நலம் பட்டம், பதவிகள் வேண்டி இருந்ததும் இல்லை. அமைதியும் எளிமையும் கொண்ட முருகையனிடம் சிந்தனை உறுதியும் செயற்பாட்டு வலிமையும் நிறைந்திருந்தது. அதற்கு அவர் வரித்துக் கொண்ட மாக்சிச பொதுவுடைமைக் கோட்பாடு தெளிவான சமூக விஞ்ஞானத் தளமாக அமைந்து கொண்டது.
கவிஞர் முருகையன் தமிழ் இலக்கியப் பரப்பில் தனது ஆளுமையைப் பதித்து மக்கள் ஆதரவையும் ஏராளம் நண்பர்களையும் பெற்றிருந்தார். அதேவேளை சமூக அரசியல் தளத்தில் பொதுவுடைமைவாதிகளைத் தோழர்களாகவும் கொண்டி ருந்தார். அவர் புதிய- ஜனநாயகக் கட்சியின் மாக்சிச லெனினிச நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு கட்சியுடன் மிக நெருக்கமான நண்பராகவும் இருந்து வந்தார். அதன் அடிப்படையில் அவ்வப்போது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலொச னைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்ததுடன் புதிய பூமி பத்திரிகையில் எழுதியும் வந்தார். சமூக மாற்றம் வேண்டி நிற்கும் சமூக அரசியல் தளத்தில் அவர் வழங்கிய பங்களிப்பின் கனதியை இவ்வேளை புதிய-ஜனநாயக கட்சி மத்திய குழு நினைவு கூர்ந்து அவருக்கு தனது ஆழ்ந்த செவ்வஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
புதிய-ஜனநாயக கட்சி
மத்திய குழு