Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமூகபொருளாதார உரிமைகளை நிலைநாட்ட இலங்கை அரசியலில் இடம்கோரும் மலே சமூகத்தவர்.

 இலங்கையின் சிறுபான்மை இனங்களுள் ஒரு பிரிவான மலே சமூகத்தவர்கள் தமது சமூகபொருளாதார உரிமைகளுக்கு குரல் கொடுக்க ஏற்ற வகையில் அரசியலில் மேலும் இடந்தேடி வருகின்றனர்.இந்நாட்டிலுள்ள 20 மில்லியன் சனத்தொகையில் இந்தோனேசிய தீவுகள் மற்றும் தென் மலேசிய வம்சாவளி மலாயர்கள் சுமார் 50,000 பேர் உள்ளனர்.

தற்போது யுத்தம் நிறைவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் சரியான தலைமைத்துவமின்றியுள்ள மலாயர் சமூகம் அடக்குமுறைக்குள்ளாகக்கூடிய நிலை ஏற்படக் கூடுமெனவும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளமை குறித்தும் அவர்கள் வருத்தந் தெரிவித்துள்ளனர்.இங்குள்ள மலாயர்களில் சுமார் 30 சதவீதமானவர்கள் நடுத்தர வர்க்கத்திலும் 60 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நாட்டின் சனத்தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவேயுள்ள மலாயர்களுக்கு நிரந்தர வருமானமோ வாழ்விடங்களோ பல்கலைக்கழக வசதிகளோ அரசாங்க வேலைகளோ இல்லையென இலங்கை மலாயர் சங்கத்தின் தலைவர் இக்ரம் குட்டிலன் தெரிவித்துள்ளார்.

இம்மலாயர்கள் டச்சு காலத்தில் கி.பி. 1600 களின் பிற்பகுதியில் படைவீரர்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.இவர்கள் மலாயை தாய் மொழியாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் கொண்டு மூதாதையரின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர்.தற்போது இச்சமூகம் இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடனான சம பிரதிநிதித்துவத்தை எதிர்பார்த்துள்ளது.மலே சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் சிறுபான்மையினரின் உரிமைகளை தற்போது தெளிவுபடுத்த வேண்டுமெனவும் இக்ரம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version