22.12.2008.
சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு சரியானதுதான் என்று பிரபல பொருளாதார நிபுணரும், பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இடஒதுக்கீடு தருவதால் தரம் பாதிக்கப்படுகிறது என்று கூறுபவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். இந்த விஷயத்தை தொலை நோக்குப்பார்வையுடன் அணுக வேண்டும். மிகவும் கவனமாக இதைப்பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. தரத்துடன் சமரசம் செய்து கொள்வது போன்ற விஷயமாக இதைப் பார்க்க வேண்டியதில்லை.
ஓடிக்கொண்டிருக்கும் நதியில் ஒரே ஒரு இடத்தில் ஏற்படும் வளைவை மட்டுமே பார்த்துக் கொண்டிராமல், ஒட்டுமொத்த நதியின் வடிவத்தை பார்ப்பது நல்லது. வருங்காலத்தில் சமூகத்திற்கு பெரும் பலன்களை அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறதா என்ற பார்வை இருக்க வேண்டும். நிறைய மதிப்பெண்களுக்கு “நீதி” கிடைப்பதில்லை என்பது இட ஒதுக்கீடு விஷயத்தில் எளிமையான விடையை அளிப்பதாகக் தோணலாம். ஆனால் “நியாயம்” என்ற ரீதியில் இதை அணுகினால் அது தொலை நோக்குப் பார்வையில் இதைப் பார்க்க வழிவகுக்கும் என்றார்.
வேறுபாடு அதிகரிப்பு
பொருளாதார வளர்ச்சி பற்றிப் பேசிய அமர்த்தியா சென், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. பெரிய அளவில் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படும் இந்த வளர்ச்சியால் ஏழைகள் பலனடையவில்லை. வளர்ச்சியின் ஒரு பகுதியே அவர்களுக்கு சென்றுள்ளது. அதுவுமே வரிவசூல் அதிகரித்துள்ளதாலேயே நடந்துள்ளது. தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் ஏழைகளை பாதிக்கும். அடிப்படை சேவைகளில் அரசின் செலவு குறைக்கப்படுவதால் இந்த நிலை ஏற்படும்.
பணம் படைத்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மீது பெரும் கவனம் செலுத்தப்படுகிறது. ஏழைகள் படும்பாடு போதிய அளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. இதிலுமே பெரும் வேறுபாடுகள் நிலவுகின்றன. பணக்காரர்-ஏழைகளுக்கிடையிலான வேறுபாடுகள் பெரும் அளவில் அதிகரித்துள்ள வேளையில், வறுமை போன்ற விஷயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சுகாதார நலன் என்பது மற்றொரு பெரும் பிரச்சனையாகும். ஆப்பிரிக்காவில் இருப்பதை விட தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைவுடைய குழந்தைகள் அதிகமாக இருக்கிறார்கள். தற்போதுள்ள அமைப்பு மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்று குறிப்பிட்டார்.
ஆரம்பக்கல்விக்கு முக்கியத்துவம்
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்தே ஆரம்பக்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நேரு போன்றவர்களின் தொலைநோக்குப் பார்வை உலகத்தரம் வாய்ந்த ஐஐடிக்களை உருவாக்கியுள்ளது. ஆனால் போதிய அளவு முக்கியத்துவம் ஆரம்பக்கல்விக்கு தராததால் எழுத்தறிவின்மை பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
வல்லரசும் நல்லரசும்
அவரது உரைக்குப்பிறகு பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதில் இந்தியா எப்போது வல்லரசாகும் என்று சிலர் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமர்த்தியா சென், இந்தியா வல்லரசு ஆவது பற்றி நான் பெரிதாகக் கவலைப்படவே இல்லை. அனைத்து வசதிகளும் கிடைத்து மகிழ்ச்சியாக மக்கள் வாழ்கிறார்களா, இல்லையா என்பது பற்றியே நான் அதிகம் கவலைப்படுகிறேன். குறிப்பிட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து ஐஐடிக்கள் கவனம் செலுத்தலாம். எழுத்தறிவின்மை மற்றும் வறுமை ஆகியவை அதில் முன்னுரிமை பெறலாம் என்று தெரிவித்தார்.