Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமாதான தைப்பொங்கல் வாழ்த்துச் சொல்லும் இலங்கை ஜனாதிபதி

மக்கள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து உண்மையாக விடுவிக்கப்பட்டு இலங்கையின் வடக்கே சுதந்திரமும் ஜனநாயகமும் மீளக்கட்டியெழுப்பப்படும் நாள் வெகு தொலைவிலில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் பரந்து வாழும் தமது இந்து சகோதரர்களோடு சேர்ந்து இலங்கையின் பிரபலமான இந்து பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தை மாதத்தின் முதல் தினத்தில் வருகின்ற தைப்பொங்கல் மரபுகளையும், கிரியைகளையும் இந்துக்கள் தொடர்ந்தும் அனுஷ்டித்து வருகின்றனர். இரு விதங்களில் புனிதமாகக் கருதப்படுகின்ற இத்தினம் சிறந்த அறுவடையை எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடின உழைப்புக்குப் பின்னர் பெற்ற அறுவடைக்காகவும் அதை அளித்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும்.

தைப்பொங்கல் பண்டிகையானது இந்துக்கள் தமது பாரம்பரிய கலாசார மரபுரிமைகளை அனுஷ்டித்து, அவற்றுக்கு தம்மை அர்ப்பணித்து, அவற்றைப் புதுப்பித்து எமது நாட்டின் ஏனைய மக்களைப் போல எதிர்காலம் குறித்த சாதகமான எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். இது எமது சமூகத்தின் பன்மைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இத் தைப்பொங்கல் தினத்தில் எனது எண்ணங்கள் எல்லாம் தங்களை விடுவிப்பதற்காக போராடுகின்றோம் என உரிமை கோருபவர்களாலேயே தொடர்ச்சியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பற்றியதாகும். இவ்விசேட தினத்தில் இலங்கை வாழ் இந்துக்களினதும் என்னுடையதும் சகோதர, சகோதரிகளான தமிழ் மக்கள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து உண்மையாக விடுவிக்கப்பட்டு இலங்கையின் வடக்கே சுதந்திரமும் சனநாயகமும் மீளக் கட்டியெழுப்பப்படும் நாள் மிகத் தூரத்தில் இல்லை என்பதை இலங்கை வாழ் இந்துக்களுக்கு உறுதிபடத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கை வாழ் அனைத்து இந்துக்களுக்கும் நான் மகிழ்ச்சிகரமான தைப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மலரும் வருடத்தில் எம்மிடையே சமாதானமும் சௌபாக்கியமும் நல்ல நம்பிக்கையும் புரிந்துணர்வும் நிலைக்கட்டும் என்ற அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்

Exit mobile version