2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் சமதானத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அதற்கான கதவுகளைத் தானே அடைத்துவிட்டார் என ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள், டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் ஊடாக உதவிகள், சுனாமிக்குப் பின்னரான கட்டுமான உதவிகள் எனப் பல்வேறு வழிகளின் ஊடாக சமாதானத்திற்கான கதவுகள் திறக்கபட்டபோதும் அவற்றைப் பிரபாகரனே மூடிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“இறுதியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனப் பிரபாகரன் எடுத்த முடிவே அவருக்கு மிகவும் பிழையான மதிப்பீடாக அமைந்துவிட்டது” என அகாசி குறிப்பிட்டார்.
இலங்;கையில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்கவில்லையெனப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரும் சமாதான முயற்சிகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசியமெனக் கூறினார்.
“அனுசரணையாளர்களும், நடுநிலையாளர்களும் சில உதவிகளை வழங்கி, ஊக்குவிப்பை மாத்திரமே வழங்கமுடியும். குதிரையைத் தண்ணீர் இருக்குமிடத்திற்கு அழைத்துவரவே முடியும். ஆனால் குதிரையைக் குடிக்கவைக்கமுடியாது” என அகாசி மேலும் தெரிவித்தார்.