Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமஷ்டி தொடர்பாகப் பேசுவதற்கு பெரும்பான்மைச் சிங்களவர்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்!:அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க.

14.10.2008.

“அதிகாரப் பகிர்வு காலங்கடந்துவிட்டது. காலாவதியாகிவிட்டது. சமஷ்டிவாதிகளுக்கு இந்த நாட்டில் நாங்கள் இடமளிக்கமாட்டோம். சமஷ்டி தொடர்பாகப் பேசுவதற்கு பெரும்பான்மைச் சிங்களவர்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேசிய வாதிகளுக்கும், சம்பந்தன் மற்றும் ஹக்கீம் போன்ற அரசியல் அடிப்படைவாதிகளுக்கும் இங்கு இடமில்லை. எனவே நாங்கள், அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசப்போவதில்லை”கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சர்வகட்சிப் மாநாடு தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு சுற்றாடல் வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டின் கொள்கை மாறிவிட்டது. நாங்களே மாற்றத்தை உருவாக்கியவர்கள் என்பதில் பெருமையடைகிறோம். 2005ஆம் ஆண்டுவரை நாடு பிரிவினை வாதத்துக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டுக் கொள்கை வாதிகளின் பிடியில் சிக்குண்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் கூட அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பேசியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி இடைக்காலத் தீர்வு பற்றிக் கதைத்திருந்தது” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்து, ஒற்றையாட்சியை நிலைநாட்டுவதைப் பற்றியே தாங்கள் கதைப்பதாகவும், இந்தத் தீர்மானத்துக்கு நாடே அணிதிரண்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 
அமெரிக்கா மற்றும் மேலைத்தேய நாடுகளின் அழுத்தங்களுக்கு அஞ்சி, அடிபணியத் தேவையில்லையெனவும், தற்பொழுது இலங்கைக்கு புதிய சர்வதேச கூட்டுக்கள் கிடைத்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது பற்றிக் கவனம் செலுத்தவேண்டும்மெனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
Exit mobile version