ஈராக்கின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திப் படையெடுத்த ரொனி பிளேர் பிரித்தானியப் பிரதமர்களுள் அதிக செல்வாக்கற்றவராக பதவியிழந்தமைக்கு இவ்வாறான மக்கள் கருத்தே காரணமாக அமைந்தது. அதிகாரத்திலிருக்கும் அரசியல் வியாபாரிகளோடும், கொலைகாரர்களோடும் கூட்டுவைத்துக்கொள்ளும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலிருக்கும் பிழைப்பு வாதிகள் இலங்கை அரசிற்கு எதிரான பொதுமக்கள் கருத்து உருவாவதற்குத் தடையானவர்களாக இருக்கின்றனர். தமிழ்ப் பேசும் மக்கள் ஏகாதிபத்தியத்தையும் சமூக விரோத அரசியல் வாதிகளையும் சார்ந்தவர்கள் என்ற தவறான விம்பத்தை இவர்கள் உருவாக்குகிறார்கள். இன்னமும் மக்கள் உலக மத்தியிலிருந்து அன்னியமான குறுகிய எல்லைகளை தமது பிழைப்பிற்காக வகுத்துக்கொள்கிறார்கள்.
இவற்றிற்கு அப்பால் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் நியாயம் சனல் 4 ஆவணப்படம் போன்றவற்றைப் பயன்படுத்தி உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
மகிந்த ராஜாபக்சவும் அவரைச் சுற்றியிருக்கும் இனக் கொலையாளிகளும் தண்டிக்கப்படாவிட்டல் உலகின் எந்தப்பகுதியிலும் சாட்சியின்றிய கொலைகள் நிகழ்த்தப்படலாம் என்ற உண்மை உலக மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.