செனல்-04 தொலைக்காட்சியின் காணொளிகளை ஐ.தே.க. கடுமையாக எதிர்க்கின்ற போதிலும் அரசாங்கம் மௌனம் சாதித்து வருவதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். செனல்-04 காணொளிகள் இலங்கையின் நற்பெயருக்குக் கடும் களங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் அமைந்திருப்பதால் அதனை ஐ.தே.க. வன்மையாக எதிர்க்கின்றது. ஆயினும் அரசாங்கம் அது குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது குறித்து நாங்கள் கவலையடைகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான சம்பவங்களின் போது எந்தக் கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அதற்குப் பதிலளித்தாக வேண்டும். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இதுவரையில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் செனல்-04 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த முதலாவது காணொளியின் போதும் அரசாங்கம் இதே போன்றே மௌனம் சாதித்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காணொளியின் போது அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்திருக்குமாயின் இன்றைய நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது. அரசாங்கம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளின் போது முகம் கொடுக்கும் கிண்டல் மற்றும் வன்முறை கலந்த நடைமுறையானது இவ்வாறான பிரச்சினைகளின் போது கைகொடுக்காது. அதற்குப் பதிலாக புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.