Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சந்தேகம் : புலிகளின் விமானமோட்டிகள் வெளிநாட்டவர்களா?

வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானத்தை செலுத்திச் சென்றவர்கள் வெளிநாட்டு விமானிகளாகவிருக்கலாம் எனும் சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு எழுந்துள்ளதாக டெய்லி மிறர் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தெரிவித்துள்ளார்.  விமானப் படை விமானங்கள், புலிகளின் விமானத்தைப் பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானங்கள், கடல் மட்டத்திற்கு தாழப்பறந்து சென்றதாகவும், சுப்பர் சொனிக் விமானத்தினைச் செலுத்தக்கூடியவர்களாலன்றி அவ்வாறு தாழப்பறந்து சிறிய ரக விமானங்களை செலுத்த முடியாது எனவும், புலிகளின் விமானங்களைப் பின்தொடர்ந்து சென்ற எப்-7 விமானத்தின் விமானி விமானப்படைத் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்காரணமாக, நன்கு இராணுவப் பயிற்சியும், அனுபவமும் கொண்ட வெளிநாட்டைச் சேர்ந்த விமானமோட்டிகள் எவராவது புலிகளின் விமானத்தைச் செலுத்திவந்திருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாகவும் அவர் தனது பாதுகாப்பு ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

புலிகளின் ஒரு விமானம் தாக்கியழிக்கப்பட்டது

வவுனியா படைத்தலைமையகம் மீது தாக்குதல் நடாத்திவிட்டு புலிகளின் இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பினை ஏற்படுத்தியவாறே கிளிநொச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், ஆனால் திடீரென்று ஒரு விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, உடனடியாக, புலிகளின் மற்றொரு விமானத்தின் விமானி சக விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக கிளிநொச்சிக்குத் தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், விடுதலைப் புலிகள் தமது வானொலி தொடர்பாடல் வலையமைப்பின் மூலம், தமது விமானம் ஒன்று எங்காவது வீழ்ந்துள்ளதா என்பது பற்றி கண்டறியுமாறு தகவல் பரிமாறியதை படையினர் ஊடறுத்துக் கேட்டதாகவும் அவர் தனது பாதுகாப்பு ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.முல்லைத்தீவு வான்பரப்பிலிருந்து தெற்கு நோக்கி புலிகளின் விமானங்கள் வந்துகொண்டிருப்பது அதிகாலை 3.26 மணிக்கு இந்திரா-2 எனும் ரேடாரில் தென்பட்டதாகவும், உடனடியாக கொழும்பிலுள்ள விமானப்படைத்தலைமையகத்துக்கு வவுனியா விமானப் படைத்தளத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டதாகவும் சுனில் ஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முதலாவது விமானம் ரேடாரில் இனங்காணப்பட்டு, 8 நிமிடங்களின் பின்னர், அவற்றைத் தேடியழிக்கும் பொருட்டு கட்டுநாயக்க விமானப்படைத்தளத்திலிருந்து எப்-7 சுப்பர் சொனிக் விமானங்கள் புறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 6 நிமிடங்கள் வவுனியா வான்பரப்பில் வட்டமிட்ட புலிகளின் இரு விமானங்களில் ஒன்று முல்லைத்தீவை நோக்கியும், மற்றொன்று கிளிநொச்சியை நோக்கியும் பறந்துசென்றதாகவும், இதேசமயம், இரணைமடுவிலும், புதுக்குடியிருப்பிலும் அமைந்துள்ள புலிகளின் விமான ஓடுபாதையை எப்-7 விமானங்கள் குண்டுவீசித் தாக்கியழித்ததாகவும் சுனில் ஜயசிறி தனது பாதுகாப்புப் பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிகாலை 3.50 மணியளவில் முல்லைத்தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த புலிகளின் ஒரு விமானத்தைப் பின்தொடர்ந்து சென்ற எப்-7 விமானம், அந்த விமானத்தின் மீது தாக்குதல் நடாத்தியதாகவும், இதனையடுத்து சில விநாடிகளில் புலிகளின் விமானம் தீப்பற்றிக்கொண்டு காட்டினுள் வீழ்ந்ததாக, விமானப்படை விமானி அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் விமானம் ஒன்றினை வெற்றிகரமாக தாக்கியழித்துவிட்டதாக விமானப்படை விமானி, விமானப்படைத் தலைமையகத்துக்கு உடனடியாக அறிவித்ததாகவம் அவர் தனது பாதுகாப்பு ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் மறுப்பு

இதற்கிடையில், தமது இரு விமானங்களும் தாக்குதல் நடாத்திவிட்டு பாதுகாப்பாகத் திரும்பிவந்துவிட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தததையும் அவர் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

– ஐஎன்லங்கா இணையம்

Exit mobile version