Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சந்திரகுமார்-டக்ளஸ் மோதல் : EPDP இல் வெடிப்பு?

dugles_chandrakumarபத்து வருடங்களின் முன்னர் ஈ.பி.டி.பி கட்சியில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அசோக் என்று அழைக்கப்பட்ட முருகேசு சந்திரகுமார் இலங்கையிலிருந்து பிரித்தானியா சென்று அரசியல் தஞ்சம் கோரினார். பிரித்தானியாவில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான சிறிய கூட்டங்களை அவர் நடத்தினார். ஈ.பி.டி.பி இன் உட்கொலைகள் உட்படப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். தினமுரசு ஆசிரியர் அற்புதனின் கொலைக்கு டக்ளசே காரணம் என்றெல்லாம் கூறிவந்தார். சில வருடங்களின் பின்னர் மீண்டும் டக்ளஸ் தேவா தலைமையிலான ஈ.பி.டி.பி இல் வாக்குக் கேட்டு பாராளுமன்ற உறுப்பினராகும் நோக்குடன் சந்திரகுமார் இணைந்துகொண்டார்.

இனப்படுகொலை அரசின் நெருங்கின பங்காளியான டக்ளசுடன் இணைந்த சந்திரகுமார், அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தமிழ் இணையங்களில் வெளியாகின.

1983 யூலை மாதம் இடம்பெற்ற இன வன்முறைகளே நாட்டை மிகப் பெரிய அழிவுக்கும், மாபெரும் துன்பியலுக்கும் இட்டுச்சென்றது என்று பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்தவொரு கண்ணிவெடித் தாக்குதலினால் 13 படையினர் பலியானதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட யூலை இன வன்முறைகள், இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் மனதில் பெரும் இடைவெளியையும் அரசின் மீது நம்பிக்கை இழப்பையும் ஏற்படுத்தின. இந்த இடைவெளி இன்னமும் நிரப்பப்படாமல் இருப்பதுதான் மிகவும் கவலைக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் ஒற்றையாட்சிச் சட்ட எல்லைக்குள் குறைந்தபட்ச மாற்றங்களைக் கூட ஏற்படுத்த இயலாது என்பது சந்திரகுமாருக்குத் தெரியதாதல்ல. இதுவரை வாக்குப் பொறுக்குவதற்குக் கூட உலகைன் கோரமான இனக்கொலையாளிகளுடன் ஒட்டிக்கொண்ட டக்ளஸின் கட்சியில் மாற்றங்கள் எதைனையும் ஏற்படுத்த இயலாது என்பதும் சந்திரகுமாருக்குத் தெரியாததல்ல.

இந்த நிலையில் டக்ளஸ்- சந்திரகுமார் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக சில இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட கறைபடிந்த வரலாற்றைக்கொண்ட ஈ.பி.டி.பி ஐக் கலைப்பதற்கான பிளவாக இது அமையுமானால் தமிழ்ப் பேசும் மக்களின் முன்னோக்கிய பயணத்தில் ஒரு தடைக்கல் அகன்றதாகக் கருதலாம்.

இனிமேலும் மக்களின் அவலங்கள் மீது வாக்குப் பொறுக்கும் சந்திரகுமாரோ, மக்களைப் பலியெடுக்கத் துணைசெல்லும் டக்ளசோ எமக்குத் தேவையற்றவர்கள்.

-பரா

Exit mobile version