Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சண்முகம் சிவலிங்கம் காலமானார்.

ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார்.

இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.

1960ம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன.

மார்க்சிய அழகியல் ரீதியில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும், அழகிய சிறுகதைகள் பலவும், கையெழுத்துப் பிரதியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன.

இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

Exit mobile version