Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சட்டமன்றத்திலேயே நடிக்கிறார் கருணாநிதி- பழ. நெடுமாறன் கண்டனம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
முறையான அனுமதி பெற்று சென்னை வந்த பார்வதி அம்மையாரை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது குறித்து எதிர்க்கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதைப் போல தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர் நடுவிலும் இந்நிகழ்ச்சி கொதிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு முதலமைச்சர் கருணாநிதி தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புவதற்கு முயற்சி செய்கிறார்.
பார்வதி அம்மையார் வருவது குறித்து தனக்கோ தமிழக அரசுக்கோ எத்தகைய தகவலும் இல்லை என்று முதலமைச்சர் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் சொல்லுவது வேடிக்கையானது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் விசா பெற்று வருவதுதான் வழக்கம். அப்படி வருபவர்கள் தமிழக அரசுக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மறுநாள் காலை பத்திரிகைகளைப் படித்தப் பிற்பாடுதான் தனக்கு விவரம் தெரியும் என்று முதலமைச்சர் முதலில் கூறிவிட்டு பிறகு இரவு 12 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்து விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது பார்வதி அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டதை தெரிந்துகொண்டதாக முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார். மலேசியாவிலிருந்து வந்த விமானம் இரவு 10.45 மணிக்குத்தான் வந்தது. ஆனால் அதற்கு முன்னாலேயே சென்னை புறநகர் காவல் துறை ஆணையாளரான ஜாங்கிட் தலைமையில் பெரும் காவலர் படையொன்று விமான நிலைய வாசலில் கொண்டுவந்து குவிக்கப்பட்டது. 10.15 மணியளவில் வைகோவும் நானும் விமான நிலையத்திற்கு வந்த போது எங்களை உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுப்பதற்கு பெருமுயற்சி செய்தார்கள். முதலமைச்சரின் உத்தரவில்லாமல் அவர்கள் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆக இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே முதலமைச்சருக்கு உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்து அதன் பின்னர்தான் காவலர் படையை அனுப்ப அவர் உத்தரவிட்டிருக்க வேண்டும்.
2003ஆம் ஆண்டில் தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு எழுதப்பட்ட கடிதத்தில் பிரபாகரனின் பெற்றோர் இந்தியாவிற்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்று எழுதி அதன் காரணமாக அவர்கள் பெயர் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இது உண்மையானால் கருப்புப் பட்டியலில் இடம் பெற்றவருக்கு மலேசிய இந்தியத் தூதுவர் அலுவலகம் இந்தியா வருவதற்கு ஆறு மாத கால விசா கொடுத்தது ஏன்? தவறுதலாகக் கொடுத்திருந்தால் அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஜெயலலிதா காலத்தில் இழைக்கப்பட்ட அநீதியை சுட்டிக்காட்டுவதன் மூலம் தனது தவறை மறைப்பதற்கு முதலமைச்சர் முயற்சி செய்கிறார். ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சினையில் எதிராக இருப்பவர். ஆனால் கருணாநிதி அவர்களோ ஆதரவாக இருப்பது போல் காட்டிக்கொண்டு எதிராகவே செயல்படுபவர்.
1970களின் தொடக்கத்தில் இவர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் டெலோ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான குட்டிமணி கைது செய்யப்பட்டார். அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்கள அரசு கேட்டபோது ஒப்படைத்தவர் கருணாநிதி ஆவார். அதன் காரணமாக குட்டிமணி சிங்களச் சிறையில் கொலை செய்யப்பட்டார் என்பது மறைக்க முடியாத வரலாறு ஆகும்.தி.மு.. வின் தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்காக பிரச்சார நாடகங்களில் நடித்தவர் கருணாநிதி. ஆனால் இப்போது முதலமைச்சராக இருக்கும்போதும் சட்டமன்றத்திலேயே நடிப்பது வெட்கக்கேடானது. பார்வதி அம்மையாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை இவருக்குத் தெரியாமல் நடக்கவில்லை. அதை மறைப்பதற்கு இவர் செய்யும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறப்போவதுமில்லை.
பழ.நெடுமாறன்
(அமைப்பாளர்)

Exit mobile version