Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சகாயத்தின் இறுதிப் பயணம் தொடங்கியது!

மீனவர் சகாயத்தின் இறுதி ஊர்வலத்தை கரையோர கிராமங்களின் வழியே அனுமதிக்க முடியாது என்று போலீசு கூறிய நிலையில், உதயகுமாரின் வழிகாட்டுதலின் கீழ் போராட்டக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உறவினர்கள் உடலைப் பெற்றுள்ளனர்.

நாகர்கோயில் அரசு மருத்துவமனையிலிருந்து கோட்டாறு தூய சவேரியார் பேராலயத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு குமரி மாவட்ட மக்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. பிறகு, இறுதி ஊர்வலம், அழகப்பபுரம், அஞ்சு கிராமம் வழியாக நெல்லை மாவட்டத்தை அடையும். பிறகு கூடங்குளம் வழியாக இடிந்தகரை சென்றடையும். நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். இதற்கேற்ப 144 தடை உத்தரவைத் தளர்த்துவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரையோர கிராமங்களின் வழியே உடலைக் கொண்டு செல்ல இயலவில்லை என்ற போதிலும், கூடங்குளத்திற்கு சகாயத்தின் உடலைக் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என்ற போலீசின் சதி முறியடிக்கப் பட்டுள்ளது.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மறைமாவட்டப் பேராயர் இவான் அம்புரோஸ், மயிலை சென்னை உயர் மறை மாவட்ட பேராயர் சின்னப்பா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக, போராட்டக்குழுவின் பிரதிநிதியாக இருந்து மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வழக்குரைஞர் மரிய ஸ்டீபன் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இன்று காலை முதல் நாகர்கோயில் மருத்துவமனையில் எல்லா தொலைக்காட்சி ஊடகங்களும் குவிந்திருந்தன. நிருபர்கள் பேட்டி எடுத்த வண்ணம் இருந்தார்கள். ஆனால் ஒரு இறுதி ஊர்வலத்தை தடுப்பதற்காக நூற்றுக் கணக்கில் அதிரடிப்படை குவிக்கப்பட்டிருப்பதைப் பற்றியோ, கடலோர கிராமங்களின் வழியே உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று போலீசு தடை விதித்ததைப் பற்றியோ எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர் சகாயத்தின் போராட்ட உணர்வும், கடற்படையின் கொலைக்குற்றமும் மெல்ல பின்னுக்கு தள்ளப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்குரிய மத உணர்ச்சி முன்னுக்கு கொண்டு வரப்படுகிறது.

மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பது உண்மையே.

எனினும், அணு உலையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காகத்தான் மீனவர் சகாயம் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மையை மத உணர்ச்சியோ, துயர உணர்ச்சியோ மறைத்து விடக்கூடாது.

______________________________________________________

வினவு

Exit mobile version