புலம் பெயர் நாடுகளில் ஊடகங்கள் மக்களின் தலையில் மிளகாய் மட்டுமல்ல நவ தானியங்கள் அத்தனையையும் அரைத்து முட்டாள்களாக்குகின்றன. அதிக எண்ணிக்கையானவர்கள் பார்வையிட வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் அடிப்படை நோக்கம். அவ்வாறு பார்வையிடுவோரின் எண்ணிக்கையைக் மூலதனமாக்கி வியாபார நிறுவனங்களிடம் விளம்பரங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
புலம் பெயர் ஊடகம் ஒன்று அண்மையில் வெளியான செய்தி ஒன்றில் புலிகள் இயக்கத்தைச் மீளமைத்தவர்கள் என்று கூறப்பட்ட மூவரும் பயன்படுத்திய வாகனம் ஒன்றை இலங்கை அரசு கையகப்படுத்தியதாகப் பரபப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இச் செய்தியில் இலங்கை அரசு கையகப்படுத்தியதாகக் கூறும் அவர்களின் வாகனத்தின் படமும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் படம் 2009 ஆம் ஆண்டு சோமாலியாவில் எடுக்கப்பட்டது. இப் படத்தை ரஷ்ய இணையம் ஒன்று வெளியிட்டிருந்தது.
இனவெறிக்கும் இனவாதத்திற்கும் எல்லைகள் கிடையாது. அடிப்படையில் தமிழனாக இருப்பதால் கொலையாளியும், கொள்ளைக்காரனும், இனக்கொலையாளியும் கூட தமிழினவாதிகளின் வட்டத்துக்குள் வந்து சேரலாம். வியாபாரத்தில் மட்டுமே குறியாகவிருக்கும் பல்தேசிய பெரு முதலாளி கூட இவர்களின் எதிரிகள் அல்ல. பல்தேசிய முதலாளிகள் ராஜபக்ச போன்றோடு அவர்களது வியாபாரத்திற்காகத் தொடர்பு வைத்துக்கொள்வார்கள். அவர்கள் தமிழர்கள் என்பதால் புனிதப்படலாம். ஏகாதிபத்தியத்திற்கும் பல்தேசிய மூலதனத்திற்கும் எதிரான தேசியவாதத்தை இனவாதமாக மாற்றி அதனூடாக அருவருக்கத் தக்க வியாபாரம் நடைபெறுகிறது. இன்று புலம்பெயர் நாடுகளின் பிரதான தமிழ்ப் பல்தேசிய நிறுவனங்களான லைக்காவும், லிபாராவும் வழங்கும் பிச்சைப் பணத்திற்காக இந்த இனவாதம் பயன்படுத்தப்படுகின்றது.