அரசியல் முரண்பாடுகளுக்கப்பால், இன்று வரை நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு வழங்கி வந்த ஆதரவென்பது மரணப் பொறிக்குள் சிக்கி நாள் தோறும் உயிரிழந்துகொண்டிருக்கும் எமது மக்களுக்கு உளவியல் பலத்தை வழங்கியது என்பதை யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் வாழும் உங்கள் இரத்த உறவுகளான தமிழ் மக்களின் பிரச்சனை என்பது வெறுமனே சிறுபான்மை இன மக்களின் பிரச்சனையல்ல இது உலக மனித குலத்தின் பிரச்சனை.
வரலாற்றின் மிகப்பெரும் மனித அவலம். இன்று இலங்கையில் சத்தமின்றி, சாட்சியின்றி நடத்தப்பட்ட சிறீ லங்கா அரசின் மனிதப்படுகொலைகள் நாளை உங்கள் வாசற்படிவந்து உங்கள் குரல்வளையை நெரிக்கலாம். உங்கள் வீட்டு முற்றத்திலேயே கொத்துக் கொத்தாக மனிதப் பிணங்கள் வீழ்ந்து கிடக்கும் போது எங்காவது ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு அழுவதைத் தவிர வேறு வழியின்றி வாழப்போகும் துயர்படிந்த நாட்கள் வெகுதொலைவிலில்லை.
தமது சுய நலன்களுக்காக ராஜபக்ஷவின் மனிதப்படுகொலையை நியாயப்படுத்தும் எம்மத்தியிலுள்ள கணக்கிடக்த்தக்க சிறுபகுதி மனிதர்கள் மத்தியில் உங்களின் பணி மகத்தானது. அந்த மனித குலவிரோதிகளின் நெஞ்சில் மிதித்து நிமிர்ந்து நின்று உங்களையெல்லாம் அண்ணார்ந்து பார்க்கத் தோன்றும் எம் போன்றவர்களுக்கு.
இந்த மனிதப்படுகொலைகளுக்கு எதிராக, இலங்கை அரசைசின் மீது போர்குற்றம் சுமத்த பல மேற்கு நாடுகள் முனைகின்றன. 17 இற்கும் மேற்பட்ட நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள அமர்வுகளின் போது சீனாவும், இந்தியாவும் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகள் இவ்வாறான மனித அழிவுகளை விசாரணைகுட்படுத்துவதையே நிராகரிக்குமானால், ஆயிரம் ராஜபக்ஷேக்கள், மனிதகுலத்தின் நச்சுவேர்கள், அனாசயமாக உட்கார்ந்து கொண்டு ஒரு குக்கிராமத்தை, அழகிய நகரத்தை அழித்துப் போட்டுவிட்டு இந்தியாவின் ஆதரவை வேண்டி நிற்பார்கள். இதை நாமெல்லாம் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருப்போம்.
நாம் அனாதரவாய்த் தனித்து விடப்பட்டிருக்கிறோம். ஈழத்தமிழர்கள் இராட்சத நாடான இந்தியாவின் தெற்குக் கோடியில் அந்த நாட்டின் கொலைக் கரங்களுக்குள் நியாயம் கேட்டு நிற்கிறார்கள்.
ஐ.நா வில் இலங்கை அரசிற்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் இழி செயலைக் கண்டித்து புலிகள் சார்பில் அறிக்கைப் போர் நடாத்திக்கொண்டிருக்கும் கே.பீ உட்படப் பலர் கண்துடைப்புக்காகவேனும் ஒரு அறிக்கை விடுத்ததாகவில்லை.
மறு புறத்தில் பிரபாகரனைப் பற்றிய விவாதங்களில் மட்டும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். உங்களின் ஈடுபாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் இந்த விவாதங்களுக்குள் இந்தியாவின் துரோகம் அமிழ்ந்து போவதையும், இலங்கை அரசு தப்பித்துக் கொள்வதையும் இதனூடாக இந்த மனிதப் படுகொலைகள் மறுபடி மறுபடி நடைபெறுவதை சாத்தியமாக்குவதையும் நீங்கள் பார்த்துகொண்டிருக்கமாட்டீர்கள் என்றே எண்ணியிருந்தோம். இந்திய அரசிற்கெதிராய் தமிழகம் கொந்தளிக்கும் என எதிர்பார்த்தோம்.
ஆனால் நீங்கள் ஒரு அறிக்கை கூட எழுதவில்லை என்பது ஏமாற்றத்தை மட்டுமே விட்டுச்சென்றுள்ளது.
ஏன் என்பது மட்டும் எமக்கு இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
நன்றியுடன்
சி. தேவகுமாரன்
இனியொரு வாசகரின் பகிரங்கக் கடிதம் : 25.05.2009