லக்ஷ்மன் யாப்பா நேற்று செய்தியாளர் மாநாட்டில் இராணுவச் சதி குறித்து சரத் பொன்சேகா கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்கையில், ஜெனரலுக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சீருடையில் இருக்கும்போது அரசியல் திட்டங்களை மேற்கொண்டமை, முப்படை தளபதிக்கு எதிராக சதி செய்தமை, இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1000 பேருக்கு பாதுகாப்பு வழங்கியமை மற்றும் ஆயுத தளபாட கொள்வனவில் ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதனைவிடுத்து வேறு எந்த விடயங்களும் இல்லை என்பதனை தெரிவிக்கின்றோம்.
அந்தவகையில் இராணுவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை நடத்துவார்கள். யுத்த விடயங்கள் குறித்து சாட்சியங்களை அளிக்க முடியும் என்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே இராணுவ பொலிஸாருக்கு அவரை கைது செய்து விசாரணை செய்யும் உரிமை உள்ளது.
30 வருடகால யுத்தத்தை நாங்கள் முடித்துள்ளோம். அதன்போது சர்வதேச மட்டத்தில் பல அழுத்தங்கள் வந்தன. நாங்கள் அவற்றுக்கு பதிலளித்தோம். எனினும் தற்போது ஜெனரல் பொன்சேகா சர்வதேசத்திடம் சாட்சியம் அளிக்க முடியும் என்று கூறுவது வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சர்வதேச மட்டத்தில் சிக்கல்கள் ஏற்படும். எனவே அது தொடர்பில் விசாரிக்க இராணுவத்துக்கு உரிமை உள்ளது.