Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோதாபய கொலை முயற்சி என்ற செய்தி ஒரு கட்டுக்கதை என்கிறார் சிறிதுங்க ஜயசூரிய.

 
 பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச  கொலை முயற்சி குறித்த வெளியான தகவல்கள் கட்டுக்கதை எனவும், எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் ஊடகப் பிரசாரம் எனவும், ” சுதந்திர மேடை| அமைப்பின்” சிரேஷ்ட உறுப்பினரான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற சுதந்திர மேடைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  போர் முடிவடைந்தவுடன் வடக்கிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என அநேகமானோர் நம்பினர். இது சாத்தியமற்றது என தற்போது உறுதியாகியுள்ளது. முன்னரைவிட தற்போது வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வெள்ளை வான் சம்பங்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. தற்போது சிங்கள இளைஞர்களையும் கடத்திச் செல்கின்றனர். எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கும் குண்டர்கள் அனுப்பப்படுகின்றனர். கட்சி பேதமின்றி ஒன்றிணைந்துள்ள சுதந்திர மேடை உறுப்பினர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

பயங்கரவாதம் இல்லையெனில், புலிகள் இல்லையெனில், இவ்வாறான மோசடிகள் ஏன் தொடரப்படுகின்றன? கோதாபயவை கொல்வதற்கு சூழ்ச்சி இருக்கின்றதாம். பார்க்கும் போது இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், இவ்வாறான பிரச்சினைகள் இருக்கவில்லை. புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதை அடுத்து தெற்கில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் கட்டுக்கதைகள்.

இவையாவும் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் ஊடகப் பிரசாரங்கள். கோதாபய குருணாகல் மாட்டத்திலிருந்து தேசிய அரசியலுக்கு அழைத்துவருவதற்கான முயற்சிகள். இவற்றுக்கு நாம் ஏமார்ந்துவிடக் கூடாது. நாம் இவர்களின் பொய்களை மக்களுக்கு வெளிப்படுத்தி தொடர்ந்தும் போராடுவோம் என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version