பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச , பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகராகக் கடமையாற்றிய தற்போதைய சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எனவும் anticorruptsl.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது செய்தி வெளியிட்டுள்ளது.
2007 மே மாதம் 6ம் திகதி ஞாயிறு லங்காதீப பத்திரிகையில் வெளியாகிய செய்தியொன்றின் அடிப்படையில் ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 50 லட்சம் ரூபா நிதி நிதியமைச்சின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இது தனியார் நிறுவனமாகும். அரசாங்கப் பணத்தில் மேம்படுத்தப்படும் இந்த தனியார் நிறுவனம் எது? அது “ரத்னா ஆரக்சக லங்கா லிமிற்றட்” என்ற ரத்னா லங்கா பாதுகாப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2006ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அரச நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டில் முப்படையினர், காவல்துறையினர் மாத்திரமல்லாது சிவில் பாதுகாப்பு படை என்பன செயற்பட்டுவரும் நிலையில், தனியார் பாதுகாப்பு சேவையொன்றின் தேவை ஏன் ஏற்பட்டது.
இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையை நோக்கும் போது அந்த இரகசியம் புலப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச , பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ் ஆகியோர் பணிப்பாளர்களாக கடமையாற்றுகின்றனர். அத்துடன் தற்போதைய டெலிகொம் நிறுவனத்தின் தலைவரான லெய்சா சந்திரசேனவும் பணிப்பாளர் சபையில் இடம்பெற்றுள்ளார்.
அரசாங்கத்தின் நண்பரான பி.பீ.ஜயசுந்தரவும் இந்தப் பணிப்பாளர் சபையில் இடம்பெற்றிருந்ததுடன், அவர் அதிலிருந்து விலகியுள்ளார். ராஜபக்ச குடும்பத்தினருடன் பற்றுக்கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான எகொடவெல என்பவர் இந்த நிறுவனத்தின் பொது முகாமையாளராக பணியாற்றுகிறார்.
சுருக்கமாகக் கூறுவதாயின் இதுவொரு குடும்ப நிறுவனமாகும். இதுவே நிறுவனத்திற்கு கிடைக்கும் சிறப்புரிமைகளுக்கான இரகசியம் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.