இதுகுறித்து பிடிஐ வெளியிட்டுள்ள செய்தி:
மாநில கூடுதல் தலைமைச் செயலர் கே. ஜெயக்குமார் தலைமையிலான 14 பேர் கொண்ட குழு இப்பரிந்துரையை வழங்கியுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் பிளச்சிமடா என்னுமிடத்தில் கோகோ கோலா குளிர்பான நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ளது. அந்த ஆலையால் அப்பகுதியில் குடிநீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதாகவும், ஆலைக் கழிவு காரணமாக விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இப்பிரச்னை குறித்து ஆராய கூடுதல் தலைமைச் செயலர் தலைமயில் குழு அமைத்தது கேரள அரசு.
இக்குழுவின் அறிக்கை இன்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கைஅமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அப்போதுஅமைச்சர் உறுதியளித்தார். உலக தண்ணீர் தினமான இன்று, இத்தகைய அறிக்கை கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய இழப்புக்காக ரூ. 84 கோடி, நீர்வளத்தை நாசப்படுத்தியதற்காக ரூ. 62 கோடி, சுகாதார இழப்புக்காக ரூ. 30 கோடி, ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு இழப்புக்காக ரூ. 20 கோடி, ஆலைக்கு தண்ணீர் விநியோகத்திற்காக ரூ. 20 கோடி என மொத்தம் ரூ. 216 கோடி ரூபாயை கோகோ கோலா நிறுவனத்திடமிருந்து பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேரள அரசின் ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.