கொழும்பு, பொறளை கனத்தை மயானத்தில் மர்மமான முறையில் பிணத்தை எரிக்கும் பணிகள் நேற்று அதிகாலை 1 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வழக்கமாக பொறளை கனத்தை மயானத்தில் மாலை 7 மணிக்குப் பின்னர் சடலங்களை எரிக்கும் பணிகள் இடம்பெறுவதில்லை.
நேற்று அதிகாலை சடலம் எரிக்கும் பணி இடம்பெற்றபோது மயானப் பகுதியில் இரண்டு ஜீப் வண்டிகளும், வெள்ளைவான்களும் நின்றதாக அயலில் உள்ள ஒருவர் பொறளை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இதுபற்றித் தாம் 1.40 மணியளவில் பொறளை காவல்துறையிடம் முறையிட்டதாகவும், ஆனால், அந்த ஜீப்கள் மற்றும் வெள்ளைவான்கள் அவ்விடத்திலிருந்து செல்லும் வரை பொலிஸார் அங்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொறளை கனத்தையில் காணப்பட்டவர்கள் சாதாரண உடை அணிந்திருந்ததாகவும், ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் படையினரைப் போன்று காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொறளை பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்த முறைப்பாடு கிடைத்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் மேற்பார்வையில் இயங்கும் கனத்தை மயானம், இரவு 7 மணிக்குப் பின்னர் இயங்குவதில்லை என்றும், அதன்பின்னர் மயானத்தின் சாவி பிரதம பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கொழும்பு மாநகரசபை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் கனத்தையில் நேற்று அதிகாலை சடலம் எரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது பற்றி எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
1988,89 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜேவிபி தலைவர் றோகண விஜேவீர உள்ளிட்ட ஏராளமானோரின் சடலங்கள் நள்ளிரவு நேரங்களில் இரகசியமாக கனத்தை மயானத்தில் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.