இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஓர் ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் அத்திபாரம் இடப்படும். இதற்கு பிள்ளையார், வைரவர் வழிபாடு செய்யப்படுகிறது. ஆலயம் அமைக்கப்பட்டதன் பின்னர் சிவாகம முறைக்கமைய விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று பூசைகள் ஆரம்பமாகின்றன.
பூசைகள் நடைபெறும் ஆலயங்களில் திருத்தங்கள் அல்லது வேறு காரணங்களுக்காக ஆலயத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாயின் ஆகம முறைக்கு அமைய விக்கிரங்கள் பாலஸ்தாபனம் செய்யப்பட்ட பால ஆலயத்தில் (சிறு ஆலயம்) வைக்கப்பட்டு பூசைகள் செய்வதே முறையானது. நாம் விரும்பும் வேளையில் உடனே விக்கிரகத்தை எடுப்பது தேவ குற்றம் தேவ சாபம் ஏற்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக பூசை நடைபெற்று வரும் தொழிலாளர்களுக்கே அமைக்கப்பட்ட தேனி பூமாரி அம்மன் ஆலயத்தை உடனே அப்புறப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளமையைக் கேள்வியுற்று அதிர்ச்சியும் கவலையும் கொண்டேன்.
நகர அபிவிருத்தி அதிகார சபையில் உள்ளவர்கள் எம்மைப் போல் மனிதர்கள் அவர்களுக்கும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அந்த வழிபாட்டுத் தலங்களை உடனே எடு எனக் கூற முடியுமா? கடவுள் இல்லையா? இந்துக்கோவில் என்பதால் உடனே எடு எனக் கூறுவது இந்து தர்மத்திற்கு முரணானது.
ஏனைய மதங்களுக்கும் அப்படியே நகர அபிவிருத்தி புனர்நிர்மாணம் எம் எல்லோருக்கும் தேவையே. நாம் எல்லோருமே கொழும்பு நகர வாசிகளே. ஆனால் வணக்கத் தலங்கள் உடனே அப்புறப்படுத்து எனக் கூற முடியாது.
1930ம் ஆண்டு முதல் பூஜிக்கப்பட்ட புனித பூமி காலா காலத்திற்கு அமைய மாற்றங்கள் ஏற்படலாம். அதற்கும் விதி பிரமாணங்கள் உண்டு. எனவே ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அப்புறப்படுத்தப்படுவதாயின் சிவாகம முறைக்கமைய கீழ்வரும் முறைகளை அனுசரிக்க வேண்டும்.
1. புதிய ஆலயம் அமைக்க உகந்த உரிய இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.
2. அதிலே ஆலய அமைப்பு முறைகளுக்கு அமைய ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.
3. தற்பொழுது உள்ள ஆலயம் பாலஸ்தாபனஞ் செய்யப்பட்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்.
4. புதிய ஆலயம் அமைக்கப்பட்ட பின்னர் பால விக்கிரங்கள் ஆகம முறைகளுக்கு அமைய பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் செய்து வழிபடுவதே சிவாகம முறையாகும்.
இது எல்லா ஆலயங்களுக்கும் பொருத்தமானது நினைத்த உடனே இந்த பொம்மை (விக்கிரகம்) எடுக்கப்படல் வேண்டும் என எந்த மனிதனாலும் கூற முடியாது. நாம் தேவ ஆசியை வேண்டி வழிபடுபவர்கள்.
எமது பரம்பரை வளர வேண்டுமென வழிபாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் எமக்குத் தேவசாபம் வேண்டவே வேண்டாம். எல்லோரும் வாழ வேண்டும் நாட்டு மக்கள் அனைவரும் அருள் பெற்ற நல்ல வாழ்வை பெற வேண்டும் என்பதையே நாம் கூறுகின்றோம்.
கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முகாமைத் தர்மகர்த்தாவும் நாட்டுச் சுதந்திரத்திற்குத் தம்மையே அர்ப்பணித்த சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் உறவினரும் ஆகிய நான் கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயம் உரிய முறையில் அமைக்கப்படல் வேண்டும் என அறிவுரை கூறுகின்றேன்.