யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள,; விரிவுரையாளர்கள் தங்கும் பொது மண்டபத்திலிருந்து பல்வேறு வகையான கண்டனங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு ஊர்வலமாக பிரதான வாசல் வரை வந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் அமைதியான முறையில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை பாதாதைகளைத் தாங்கிப் போராட்டம் நடத்தினார்கள்.
யாழ் பல்கலைக்கழகம் என்பது கல்விக்கழகமா அல்லது கொலைக்களமா ?
நினைத்த நேரத்தில் பல் கலைக்கழகத்தை மூடுவது தான் மாணவர்களின் மையக் கல்வியா?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மகாத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனையல்ல புரிந்து கொள்ளுங்கள்.
பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துக.
அச்சுறுத்தலும் கொலை மிரட்டலும் பயங்கரவாதம் இல்லையா?
ஆசியாவின் அதிசயம் பல்கலைக்கழக ஆசிரியர்களைக் கொல்வதா?
போன்ற சுலோகங்களை ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தார்கள்.
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் திருக்குமரன் கூறினார்
இதற்கு முன்னரும் பெயர் குறிப்பிட்டு இத்தகைய உயிர் அச்சுறுத்தல்கள் வெளியிடப்பட்டிருந்தனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் நாட்டை விட்டே வெளியேறிவிட்டதாக தெரிவித்த திருக்குமரன், ‘உயிர் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அது பல்கலைக்கழகத்தையும் சமூகத்தையும் நாட்டையும் பாதிப்பதாக அமையும்’ என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை அரச படைகளின் பயங்கரவாத நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த அச்சுறுத்தல்கள். தெற்காசியாவின் அரச பயங்கரவாதி மகிந்த ராஜபக்ச நடத்தும் திட்டமிட்ட இனப்படுகொலை கல்வி உரிமையை அழிக்கிறது. இதற்கு எதிராக சிங்கள மாணவர்கள் மத்தியிலும் புலம்பெயர் நாடுகளில் பல்கலைக்கழகங்களில் மத்தியிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் புலம்பெயர் தமிழர்களின் புதிய சந்ததி ‘தமிழ் சொசைட்டி’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். கடந்த பல வருடங்களாக செயற்பட்டுவரும் இந்த அமைப்பு தென்னிந்திய சினிமாக் கேளிக்கைகளையும் குத்தாட்டங்களையும் மட்டுமே நடத்திவருகிறது. இக் குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்கு லைக்க மோபைல் நிறுவனம் 5 ஆயிரம் பவுண்ஸ்கள் நன்கொடையாக வழங்கி ‘தேசிய உணர்வை’ வளர்த்தெடுக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலோ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமை முற்றாக மறுக்கப்படுகிறது.. யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் முள்ளிவாய்க்கால் சம்பவங்களை நினைவுகூரும் திகதியை உள்ளடக்கி, யாழ். பல்கலைக்கழகம் இம்மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் மூடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் சுரொட்டியின் மூலம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் அனாமதேய துண்டுப் பிரசுரங்கள் யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒட்டப்பட்டும் வீசப்பட்டும் இருந்தன.