இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது இலங்கையின் சொந்த நடவடிக்கையாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோது ஐ.நா பொதுச்செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இதனைத் தெரிவித்தார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது இலங்கையின் சொந்த விடயமாகும். இலங்கையின் இந்த விசாரணை நடவடிக்கை, எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதை அவதானிப்பதே ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும்
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாக, நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு இலங்கையின் பதிலை ஆராய்வதும் அதில் உள்ளடங்கியுள்ளதாக நெசர்க்கி தெரிவித்தார். இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
குறித்த விடயங்களை ஐக்கிய நாடுகளின் நிர்வாக பிரிவுகளிடம் ஒப்படைப்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் மார்டின் நெசர்க்கி தெரிவித்தார்.