Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலைக்கரங்களுள்ளிருந்து ஒலிக்கும் சில குரல்கள்

அரசாங்கம் ஊடகங்களை அடக்கி, ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று ஊடக மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
ஊடக ஒடுக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொண்வரும் அடக்குமுறையானது அரசாங்கம் சர்வாதிகார நிர்வாகத்தை நோக்கி நகர்வதையே வெளிக்காட்டுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர ஊடக அமைப்பின் செயலாளர் சுனில் ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது அரசாங்கம் ஊடகங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக பல்வேறு வகையில் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் விடுத்துவந்தது. தேர்தல் முடிவுகளின் பின்னர் இந்த நடவடிக்கைகள் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் மக்களின் தகவல் அறியும் உரிமைகளைப் பறிக்க முயற்சித்து வருகிறது. தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஹெக்நேலியகொட காணாமல் போனார். அவர் காணாமல் போய் 15 நாட்கள் கடந்துள்ளன. பாதுகாப்புத் தரப்பினரோ காவல்துறையினரோ அவர் குறித்து எந்தத் தகவல்களையும் இதுவரை கண்டறியவில்லை.

34 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்கம் மக்களின் தகவல் அறியும் உரிமைகளை இல்லாமல் செய்யும் நோக்கில் லங்கா பத்திரிகையை சீல் வைத்து மூடியது. அதன் ஆசிரியர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் ஜயசேகர மேலும் கூறினார்.

Exit mobile version