Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொட்டாஞ்சேனை முதல் கொலொன்னாவை வரை வீடுகளை உடைக்க திட்டம்:மனோ கணேசன்

கொட்டாஞ்சேனை முதல் கொலொன்னாவை வரை நகர அபிவிருத்தி என்ற பெயரில் வீடுகளை உடைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது 

– மனோ கணேசன்

கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை முதல் கொலொன்னாவை வரை வரையிலான கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் நிறைந்த பகுதிகளில் நகர அபிவிருத்தி செய்கிறோம், வீதிகளை அகலப்படுத்துகிறோம் என்ற பெயரில் கட்டிடங்களை உடைத்து ஊடுருவி செல்லும் பாதைகளை அமைக்க நகர அபிவிருத்தி சபை திட்டங்களை தீட்டி வருகிறது.

நகர அபிவிருத்திக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களையும், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களையும் குறிவைத்து அச்சுறுத்தி அகற்றும் நடவடிக்கைகளை நாம் அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் வாழும் மக்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுமானால், இவற்றை இனவாத நடவடிக்கைகளாகவே நாம் தேசிய, சர்வதேசரீதியாக அடையாளப்படுத்துவோம் என் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரனின் ஏற்பாட்டில் கொழும்பு, ஸ்ரீ நாராயணகுரு மண்டபத்தில் இன்று நடைபெற்ற, கொலோன்னாவை பிரதேச மக்களுடனான சந்திப்பில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நாம் ஊடக அரசியல் செய்கிறோம் என சில கையாலாகாத முட்டாள்கள் சொல்கிறார்கள். நாங்கள் உரிய கருத்துகளை, உரிய வேளையில், உரிய முறையில் உரக்க சொல்வோம். இந்த நாட்டில் எந்த ஒரு மூலையிலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ன சொல்கிறார் என தெரிந்து கொள்ள விரும்பும் பெருந்தொகையான மக்கள் இந்த நாட்டிலும்,வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். கொழும்பில் உள்ள தூதரகங்கள் இருக்கின்றன. இந்த தகைமை எமக்கு சும்மா வந்தது அல்ல. கடுமையான சூழலில், நாங்கள் பொறுப்புடனும், துணிச்சலுடனும் நமது கருத்துகளை எப்போதும் கூறிவருகிறோம். அதனால்தான் ஊடகங்களும் அவற்றை பிரசுரிக்கிறார்கள். வெட்டித்தனமான பேச்சுகளை பிரசுரிக்க நமது ஊடக ஆசிரிய பொறுப்பாளர்கள் பொறுப்பற்றவர்கள் அல்ல. இது முதலில் தெரிந்து கொள்ளப்படவேண்டும். ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் எனது கருத்துகளை நானே எழுதுகிறேன். நாட்டு நடப்புகள் தொடர்பில் ஊடக அறிக்கை எழுதிகொடுக்க சம்பளத்துக்கு ஆள் வைத்து இருப்பவர்களுக்கு, இந்த தகைமை புரியாததில் ஆச்சரியம் இல்லை.

அதேவேளை எங்கள் முன்னெடுப்புகள் பேச்சுகளுடன் மாத்திரம் நின்று விடுவது இல்லை. நான் ஒரு வாய்ப்பேச்சு வீரன் அல்ல. நாங்கள் தெருவிலும் நின்று போராடுகிறோம். கொழும்பில் தமிழ்நாடு என்ற நவகளனிபுர பகுதியில் புல்டோசர்களுடனும், ஆயுதம் தாங்கிய காவல் படையினருடனும், வீடுகளை உடைக்க அரசு முயற்சி செய்தபோது, புல்டோசர்களுக்கு முன்னால் நின்று அந்த முயற்சியை தடுத்து வீடுகளை காப்பாற்றியது, இந்த மனோ கணேசன்தான். கொழும்பு கொச்சிக்கடையிலே ஒரு பெரும்பான்மை அரசியல்வாதி மாதா சிலையை அகற்றி, தனது ஆதரவாளர்களுக்கு சட்டவிரோத கடைகளை கட்ட முயன்றபோதும், அதை சண்டையிட்டு தடுத்து நிறுத்தியதும் நாங்கள்தான். கொழும்பில் ஒரு தமிழ் பாடசாலையை பக்கத்தில் உள்ள படைமுகாம் கைப்பற்ற திட்டம் தீட்டியபோதும், மத்திய கொழும்பில் இந்து பாடசாலைகள் அமைக்க வேண்டாம் என்றும் நான் பயமுறுத்தப்பட்ட போதும், என் கடமையை நான் ஆளுமையுடன் செய்து காட்டியுள்ளேன். வடக்கில், கிழக்கில் போராட்ட பங்களிப்புகளை வழங்கியுள்ள்ளோம். மலைநாட்டு தோட்ட தொழிலாளிக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு என கோரி போராடி கல்லடி வாங்கி காயப்பட்டுள்ளோம். இன்று, எங்கள் தமிழ் தடுப்பு காவல் கைதிகள் படும்பாட்டை உலகிற்கு தெரியப்படுத்த கொழும்பில் வெலிக்கடை சிறைக்கூடத்திற்கு எதிரில் நின்று இருந்து ஆர்ப்பாட்டம் செய்வதும் நாங்கள்தான். இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். இந்த உண்மையான நடப்பு செய்திகளைத்தான் ஊடகங்கள் பொறுப்புடன் வெளியிடுகின்றன.

ஆகவே சிந்தனை, பேச்சு, செயல் மூன்றும் எங்களிடம் உள்ளன. இத்தகைய எங்கள் தகைமைகளை தடுத்து நிறுத்தி அழிக்கத்தான் இந்த அரசு தன் கைக்கூலிகளை ஏவி விட்டுள்ளது. ஆகவேதான் மேல்மாகாணசபை தேர்தலில், அரசுக்குள் இருக்கும் சிலர், மாறுவேடத்தில் குருவி, காக்கை சின்னங்களில் வாக்கு கேட்டு வந்து கிடைக்கும் வாக்கை அப்படியே கொண்டு சென்று வெற்றிலை சின்னத்துக்கு கொடுக்க முயல்கிறார்கள். இவர்களைவிட நேரடியாக வெற்றிலை சின்னத்தில் வாக்கு கோருபவர்களை நான் மதிக்கின்றேன். அவர்கள் ஒருவிதத்தில் நேர்மையாளர்கள். அந்த நேர்மை இவர்களிடம் இல்லை.

இந்த நாட்டில் இன்று போதைபொருள் கொள்கலன்களில் கொண்டு வரப்படுகிறது. சமீபத்தில் 260 கிலோ ஹெரோயின் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர் ஏன் இந்த கொள்கலனை, துறைமுகத்தில் இருந்து அகற்ற கடிதம் கொடுத்தார் என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை. இந்த கொள்கலன் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதைவிட எத்தனையோ கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. போதை பொருள் வர்த்தகம் செய்யும் அரசியல்வாதிகளை இப்போது கொழும்பு அரசியலிலும் பார்க்க கூடியதாக இருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகளை களவாடி அதிகாரத்தில் உள்ளோருக்கு கொடுக்க இப்போது போதைபொருள் வியாபாரிகளும் பயன்படுத்தப்படுகிறார்கள். தமிழ் மக்கள் இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்.

அரசில் இருப்பவர்கள், நகர அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் பேசும் மக்களை குறிவைத்து முன்னெடுக்கப்படும் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதை செய்வதை விடுத்து எங்கள் நோக்கி காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துகூற கூடாது. நேற்றும், அதுபோல் இன்றும், நாளையும் கொழும்பில் சிறுபான்மை மக்களுக்கு துன்பம் வரும்போது அதற்கு எதிராக தெருவில் இறங்குபவர்கள் நாங்கள்தான். எமது அந்த கடமையை நாங்கள் துணிச்சலுடன் எப்போதும் செய்வோம். மாலையில் ஒன்றையும். மறுநாள் காலையில் வேறு ஒன்றையும் கூறும், மாறு வேட, தூரநோக்கு இல்லாத கபட அரசியல் எனக்கு தெரியாது. கொழும்பு தேர்தல் களத்தில் நம்பகத்தன்மை கொண்ட ஒரே கட்சி, ஏணிகட்சி எனவும், மனோகட்சி எனவும் செல்லமாக அழைக்கப்படும் எங்கள் ஜனநாயக மக்கள் முன்னணிதான். ஆகவே ஆளுவோருக்கு தூக்குத்தூக்கி வேலை செய்யும் நபர்களுக்கும், போதைவஸ்து வியாபாரிகளுக்கும் தவறியும் வாக்களித்துவிடக்கூடாது. ஆளுமையுள்ள எங்களுக்கு நமது மக்கள் வாக்களிக்க வேண்டும் என அன்புள்ள உரிமையுடன் கேட்டுகொள்கிறேன்.

Exit mobile version