மே மாதம் 18 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ரபல்கர் சதுக்கத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் சர்ச்சைக்குரியதாக மாறியது. நிகழ்வை பிரித்தானிய(த்) தமிழர் பேரவை ஏற்பாடுசெய்திருந்தது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் இரண்டு பிரதான தமிழர் அமைப்புக்களான தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) மற்றும் பிரித்தானிய(த்) தமிழர் பேரவை(BTF) ஆகியவற்றிற்கு இடையேயான அதிகாரப் போட்டியாக இந்தி நிகழ்வு முடிவடைந்தது. புலி இலச்சனை பொறிக்கப்பட்டு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைக்கொண்ட கொடி தமிழர் தேசியக் கொடியென்றும் அதனைத் தவிர்த்து தமிழர்களுடைய அரசியல் நிகழ்வுகள் எதுவும் நடத்தப்பட முடியாது எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவை இதுவரை காலமும் தனது கருத்தை முன்வைத்து அதற்கு இசைவாக புலம்பெயர் மக்களைத் தமது நிகழ்வுகளை நோக்கி அணிதிரட்டியது.
இறுதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வு நாளில் குறித்த கொடியைப் பயன்படுத்தக்கூடாது என்று கலந்துகொண்டவர்களை BTF அறிவுறுத்தியிருந்தனர். அங்கு வந்திருந்த சில இளைஞர்கள் கொடியை ஏற்றாமல் நிகழ்வை ஆரம்பிக்க முடியாது எனக் கலகம் செய்ய ஆரம்பித்தனர்.
இன்று பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கலத்தின் பின்னணியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவே (TCC) செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது இலங்கைச் சூழலில் மக்கள் விடுதலையடைவதற்கான இன்றைய தவிர்க்க முடியாத முன் நிபந்தனை. அதற்கான உறுதியான, தத்துவார்த்த அடிப்படையில் புடம்போடப்பட்ட, மக்கள் சார்ந்த அரசியல் வேலைத்திட்டத்தைக் கொண்ட அமைப்பே இன்றை பிரதான தேவை. இலங்கையில் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளையே தாஜா செய்து விடுதலை பெற்றுத் தருகிறோம் என மக்களை ஏமாற்றிய அமைப்புக்களிடம் குறைந்தபட்ச அரசியல் வேலைத்திட்டம் எதுவும் இல்லை.
அவற்றின் தத்துவார்த வழிமுறை என்பது, புலம்பெயர் நாடுகளிலுள்ள சுய நிர்ணைய உரிமைக்கு கோட்பாட்டளவிலேயே எதிரான அரசியல் வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் நம்புமாறு மக்களைக் கோருவதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
இலங்கையில் ராஜபக்ச பாசிசத்தின் இருப்பிற்குத் துணைசெல்லும் சமூக அரசியல் சக்திகள் தொடர்பாகவோ, உலக அளவிலான அரசியல் மாற்றங்கள் தொடர்பாகவோ குறைந்தபட்ச அடைப்படைகள் கூட இல்லாமல் வெற்று முழக்கங்களே இவர்களின் அரசியல். முள்ளிவாய்க்கால் தினம், மாவீரர் தினம் போன்ற பெரும் பணச் செலவில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் நடைபெறும் போது மட்டும் போர்க்குற்றக் காணொளிகளை தவணை முறையில் வெளியிட்டு மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அணிசேர்த்துக் கொள்வதே இவர்களின் மூலோபாயம்.
ஆக, இருப்பிலுள்ள அரசியலில் எந்த மாற்றத்தையும் கோராத,வெற்று முழக்கங்களை தந்திரோபயமாகவும், தவணை முறையில் உணர்ச்சி வசப்படுத்தலை மூலோபாயமாகவும் கொண்டிருக்கும் இந்த அமைப்புக்களுக்கு கொடி என்பது எரியும் பிரச்சனை!
வடக்குக் கிழக்கு என்ற இராணுவம் விதைக்கப்பட்டுள்ள மயான மண்ணிலிருந்து பிடுங்கியெறியப்பட்டு , புலம்பெயர் நாடுகளில் பணச் சிறைக்குள் பூட்டிவைக்கப்பட்டவர்களே புலம்பெயர் தமிழர்கள். பிறந்த மண்ணின் அசல் வித்துக்கள் போலன்றி அன்னியர்கள் போன்று களியாட்டங்களிலும் கும்மாள்ங்களிலும் ஈடுபடப் பழக்கப்படுத்திக்கொண்டுள்ள இப் புலம்பெயர் சமூகத்தின் அறியாமையைத் தமிழ அமைப்புகள் மாற்ற முற்படவில்லை, மாறாக அதனைப் பயன்படுத்திக்கொண்டன.
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அங்கங்கள் போல அவலங்களில் பங்கெடுக்கும் அரசியல் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க மறுத்த இந்த அமைப்புக்களும் அழிவுகளில் பங்குவகிதவையே.
கோயில் முதலாளிகளும், கடத்தல் காரர்களும், கட்டியக் காரர்களும், கிரிமினல்களும் கொடியோடு கும்மாளமடிப்பதை போராட்டம் என்றார்கள்.
ஒபாமாவும், தொழில்கட்சியும், ரோரிக் கட்சியும் இலங்கை அரசிற்கு ஆயுதங்களை வழங்கி இனப்படுகொலையையும் இனச்சுத்திகரிப்பையும் துரிதப்படுத்திய போது கேலிக்கிடமான உப அமைப்புக்களை உருவாக்கி மக்களின் பணத்தை நாசப்படுத்தினார்கள். ஒபாமாவிற்கான தமிழர்கள், தொழிற்கட்சிக்கான தமிழர்கள், கொன்சர்வேட்டீவிற்கான தமிழர்கள் என்று பல அமைப்புக்களைத் தோற்றுவித்து கொலைகாரர்களின் பங்காளிகள் ஆனார்கள்.
ஆக, இவர்களுக்கு கொடியையும் பிரபாகரனையும் விட்டால் வேறு வேறு போக்கிடமோ புகலிடமோ கிடையாது.
அதனால் தான் கொடியின் விடிவிற்காக முரண்பட்டுக்கொள்கிறார்கள். உறுதியான தத்துவார்த்த வழிமுறையும், அரசியல் கோட்பாடும், அதற்கான நடைமுறையும் கொண்ட ஒரு கட்சியோ அன்றி அமைப்போ தனக்கான அடையாளமாகக் கொடியை உருவாக்கிக் கொள்வது வழமை. எந்த அடிப்படைகளுமற்ற இயக்கம் கொடியை மட்டுமே தமது ஆதரமாக நம்பியிருக்குமானால் அது கொடிக்கே அவமானம்.
கொடியைப் பயன்படுத்தக்கூடாது என்று பிரித்தானியத் தமிழர் பேரவை ஐந்து வருடங்களுக்குப் பின்னர் முன்வைக்கும் கருத்தின் சாராம்சம் மக்கள் சார்ந்த அரசியலின்பாற்பட்டதல்ல, தாம் சார்ந்த அதிகாரவர்க்கத்தைத் திருப்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அதனை அவர்களே தமது அறிக்கையில் கூறுகின்றனர்.
தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து புதிய மக்கள் சார்ந்த அரசியல் தொடர்பான எந்த அக்கறையுமின்றி கொடிய நிராகரித்தால் தமிழீழக் கனவும் நனவாகிவிடும் என்பது போன்று மக்களை மந்தகளாக்குகின்றனர்.
மறுபுறத்தில் பி.ரி.எப் கொடியை நிராகரித்தமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு கிடைத்த வரப்பிரசாதமாகிவிட்டது! மக்களை உணர்ச்சிவப்படுத்துவதற்குப் பிரபாகரனையும் கொடியையும் சுற்றி கட்டிவைத்திருந்த ஒளிவட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தன்வசமாக்கிக் கொண்டது. இனிமேல் கோட்பாடற்ற அரசியலை முன்னெடுக்க ஒருங்கிணைப்புக் குழு முழு வாய்ப்பையும் பெற்றுக்கொண்டது.
யாராவது அரசியல் திட்டத்தை முன்வைத்தாலோ புதிய வழிமுறைகளைப் பற்றிப் பேசினாலோ ‘தேசியக் கொடியையும்,தேசியத் தலைவரையும் பற்றிப் பேசாமல் அரசியல் பற்றிப் பேசும் துரோகிகள்’ என முழங்குவதற்கு TCC இற்கு முழு உரிமையையும் பிரிஎப் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது.
இந்த இடைவெளிக்குள் நிலப்பறிப்பு, சூறையாடல், கொலை, சிங்கள பௌத்த மயமாக்கல் போன்ற தனது வழமையான ‘கைங்கரியங்களை’ ராஜபக்ச பாசிசம் தங்குதடையின்றி நடத்தும். கொடியைப்பற்றி இவர்கள் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் போதே கோவணத்தையும் களவாடி பல்தேசிய வியாபாரிகளுக்கு மலிவு விலையில் ராஜபக்ச கும்பல் விற்பனை செய்துவிடும்.
தயவுசெய்து உணர்ச்சி வியாபாரத்தைக் கைவிடுங்கள்!பொதுவான அரசியல் திட்டம் குறித்த விவாதத்திற்கு அழைப்பு விடுங்கள்!! தோல்வி குறித்த இதசுத்தியோடு விமர்சனம் செய்துகொள்ளுங்கள்!!! அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு பொதுவகன அரசியல் கோட்பாட்டை முன்வையுங்கள்!!!! அதனை நோக்கி மக்களை அணிதிரளக் கோருங்கள்…. அதனை நோக்கி மக்களை ஒற்றுமையடைய அறைகூவுங்கள்…. வெற்று அடையாளங்களையும் சுலோகங்களையும் நோக்கி அணிதிரட்டப்படும் மக்கள் கூட்டம் நிலையற்ற உணச்சிமயமான ஒருங்கிணைவு! அரசியல் வழிமுறையையும் அரசியல் கோட்பாட்டையும் நோக்கி அணிதிரட்டப்படும் மக்கள் கூட்டம் உணர்வு பூர்வமான வெற்றிக்கான ஒருங்கிணைப்பு!!
-ரமணா
பிரிதானியத் தமிழர் பேரவையின் அறிக்கை:
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் அன்று அங்கு அல்லல்பட்ட மக்கள் இன்னமும் தாயகத்தில் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களது குரலாக புலம் பெயர் மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக கடந்த மே 18 இல் லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையை தாம் தடைசெய்வதன் மூலம் பேரவை ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற இலங்கை அரசின் எண்ணத்தை லண்டன் வாழ் தமிழர்கள் புறந்தள்ளி பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டார்கள். இதன் மூலம்இ பிரித்தானிய தமிழர்கள் தாயக மக்களின் விடுதலைக்காக போராட அன்று போல இன்றும் முன்னிற்பார்கள் என்ற தெளிவான செய்தியை ராஜபக்ச அரசுக்கும் உலகிற்கும் விடுத்திருகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான புலம் பெயர் போராட்டம் என்னும் அத்தியாயத்தை ஆரம்பித்ததில் பிரித்தானிய தமிழர் பேரவை முக்கிய பங்கினை வகித்திருந்தது என்பது பலரும் அறிந்ததே. தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்இ வெளியுறவு அமைச்சுஇ பல்வேறு கட்சிகள்இ ஐ நா மனித உரிமைகள் கழகம் போன்றவையுள்ளிட்ட பல்வேறு தளங்களைப் பாவித்து புதுப் பரிமாணத்தில் போராட்டத்தினை வேகமெடுக்க வைத்தோம். வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்ற விழுமியங்களுடன் மக்கள் பங்குபற்றும் சனநாயக அடிப்படையில் தன்னைப் புதுப்பித்தது. ஆயினும்இ பேரவை ஆரம்பித்த காலம் முதல் அது தாங்கிவரும் வலிகள் ஏராளமானது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் பல அசம்பாவிதங்கள் நடந்ததாகவும் இன்னும் ஓரிரு வருடங்களில் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்படும் எனவும் தனி நபர்களும் ஒரு சில தமிழ் ஊடகங்களும் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன.
பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்த சில சம்பவங்களைப் பதிவு செய்வது பேரவையின் கடமை.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரித்தானியாவிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒரு சில பொறுப்பாளர்களின் வழிநடாத்தலில் ஒருசில இளைஞர்கள் நிகழ்வில் அத்து மீறி நுழைந்தனர். தாம் தேசியக் கொடியினை ஏற்றப்போவதாக கூறி கோஷமிட்டதுடன் பிரித்தானிய தமிழர் பேரவையினர் தேசியத்துக்கு எதிரானவர்கள் என குற்றம் சாட்டினர். தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்திய இச் சம்பவம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரமின்றி செய்யப்பட்டதாகவே நாம் கருதுகின்றோம். அவ்வாறாயின் இதனைத் தூண்டிய பொறுப்பாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும்இ குறிப்பாக ஒடுக்குமுறைக்கெதிராக போராடும் இனங்களுக்கு தமது தேசியக் கொடி உன்னதமானது. நாமும் அதற்கு மாறானவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.
வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் விழுந்து விடாமலும் அவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிடாமலும் எமது பக்க நியாயத்தையும் உண்மையினையும் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவினையும் அனுதாபத்தினையும் பெற்றுக்கொள்வதற்குஇ நாம் வாழும் நாடுகளின் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களையும் மதித்து அவற்றுக்கு அமைவாக செயற்படுவது மிகவும் அவசியமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவ்வாறு செயற்பட்டதன் விளைவாகஇ பிரித்தானிய தமிழர் பேரவை போருக்குப் பின்னரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பினை செய்ய முடிந்திருக்கிறது.
தேசியக் கொடி தொடர்பில் காவல் துறை நிலமைகளுகேட்ப வெவ்வேறு விதமாகக் கையாள்கின்றது. நாம் எதிர்காலத்தில் ஆட்சிப்பீடங்கள் மீது அழுத்தங்களை அதிகரிக்கும்போது சட்டத்தினை எம் மீது ஏவி விடவும் தமிழர் பேரவையை தடை செய்யவும் இன்றைய சூழ்நிலையில் இடமுண்டு.
தமிழ்மக்களின் தேசிய கொடியினை ஏற்றக் கூடாது என்ற பிரித்தானிய பொலிசாரின் அறிவுறுத்தல்கள் எமக்குத் தரப்பட்டுள்ளதால்
பிரித்தானியாவின் சட்டங்களுக்கு அமைவாகவே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.
இதனைஇ பிரித்தானிய தமிழர் பேரவைஇ தமிழ் மக்களின் தேசிய கொடிக்கு எதிரானது என்றும் தமிழ் மக்களின் அடையாளத்தினை இதன் மூலம் பிரித்தானிய தமிழர் பேரவை அழிக்க முற்படுகிறது என்றும்இ ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தெரிந்து நின்று செற்படும் சிலரும் தெரியாமல் நின்று செயற்படும் சிலரும் விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
உண்மையில்இ எந்த ஒரு அமைப்பினை விடவும் இ பிரித்தானிய தமிழர் பேரவையே தமிழ் மக்களின் தேசிய கொடிக்கு ஒருஅங்கீகாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு உண்மையான கரிசனையுடனும் பற்றுறுதியுடனும் செயற்பட்டிருக்கிறது. எமது தேசிய கொடிக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும் பல வேலைகளை அரசியல் ரீதியாகவும் வெகுஜன செயற்பாடுகள் மூலமாகவும் நாம் மேற் கொண்டிருக்கிறோம்.
உதாரணமாகஇ பிரித்தானிய பொலிசாருக்கு இது விடயத்தில் கடந்த பல மாதங்களாக பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களின் தேசிய கொடியினை அங்கீகரிக்குமாறு கோரி அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
இந்தக் கொடியினை ஏன் பிரித்தானிய பொலிசார் அங்கீகரிக்கவேண்டும் என்று வரலாற்று ரீதியான பல உண்மைகளை கோடிட்டு ஆய்வுக் குறிப்புக்களை பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாருக்கு அனுப்பியிருக்கிறது.
இது தொடர்பில் பிரித்தானியாவில் ஒரு சுயாதீனமான சர்வஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தி தேசியகொடி மீதான ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விருப்பத்திணை வெளிப்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கிறது. தேசிய கொடி விடயத்தில் பிரித்தானிய பொலிசாருடன் நடைபெற்ற மின்னஞ்சல்இ கடித பரிமாற்றங்கள் மற்றும் தயாரித்து வழங்கப்பட்ட ஆவணங்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை தயாராக இருக்கிறது. இந்த பரிமாற்றங்களை ஊடகங்களில் வெளியிடுவற்கான அனுமதியினை பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாரிடம் கோரி இருக்கிறது. பொலிஸாரிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் அவை பொது மக்களுடன் பகிரப்படும்.
பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை அதனை புலிகளின் முன்னரங்க அமைப்பு (குசழவெ ழுசபயnளையவழைn) என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக பரப்புரை செய்து வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதப் போராட்டமாக ஏனைய நாடுகளை நம்ப வைப்பதில் வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா அரசின் பரப்புரை இன்றுவரை பல நாடுகளின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இன அழிப்புக்கு உட்படுத்துவதனை நியாயப்படுத்தி வருகின்றது. ஆனால் நாங்கள் பொது மக்கள் கொல்லப்பட்டதை பொது மக்களாக நியாயம் கேட்கும் போது சர்வதேச சமூகம் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் உள்ளது என்பது எமது அனுபவபூர்வமான உண்மை.
2009க்கு முன்னர் நிலப்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் தக்க வைக்கக் கூடிய பலத்துடன் விடுதலைப் புலிகள் ஒரு நடைமுறை அரசாக செயல்பட்ட போது அப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் தம் பூகோள நலன் கருதியும் சர்வதேச சக்திகள் தலையிட்டு இரு தரப்பினரோடும் பேச வேண்டிய தேவை இருந்தது.
மே 2009க்குப் பின்னர் வலுச் சமநிலை எமக்குப் பாதகமாக மாறியது. அதன் பின் சிங்கள தேசத்திற்கோ சர்வதேசத்திற்கோ தமிழர் தரப்புடன் பேசியே ஆக வேண்டும் என்பது அவசியமாகப்படவில்லை. எம் மக்கள்இ யாராலும் பாதுகாக்கப்படாத நிலையில் எம் மக்களுக்கு நடந்தஇநடக்கின்ற கொடுமைகளை எடுத்துச் சொல்லி உலக நாடுகளின் கவனத்தினை ஈர்த்து அவர்களைப் பாதுகாக்கக் கூடிய தற்காலிக மற்றும் நிரந்தர நடைமுறைகளை செயல்படுத்த வைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
படிப்படியாக உலகின் பார்வையில் மாற்றமும் வருகின்றது. இன்றைய நிலையில் எமது உறவுகளை காக்கவேண்டுமாயின் எமக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியமாகின்றது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே நாம் மிகவும் கவனமாக எமது செயல்பாடுகளை அமைத்து வருகின்றோம். சர்வதேசத்தோடு நாம் அந்நியப்பட்டு நிற்பதா அல்லது சர்வதேசத்திற்கு தமிழின அழிப்பினைச் செய்யும் சிறிலங்காவினை தோலுரித்துக் காட்டி அதனை அன்னியப்படுத்துவதா என்ற தெரிவினை நாம் தீர்மானகரமாக மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ற விதத்தில் எம் மூலோபாயங்களையும் செயல்பாடுகளையும் நெறிப்படுத்த வேண்டும்.
இன அழிப்புக்குள்ளான தேசம் என்று பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ள வைப்போமாயின் ஒரு நாட்டிற்குள்ளேயே சேர்ந்து வாழுங்கள் என்ற அணுகுமுறை மாற்றப்பட்டு எமது அபிலாசைகள் என்ன என்பதனை கருத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
எமது போராட்டத்துக்கான அங்கீகாரமே இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு முக்கியமானது. பிரித்தானிய தமிழர் பேரவையின் மேடையில் பிரித்தானிய பிரதமர் ஏறி எமது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்இ அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை எமது சுயநிர்ணய உரிமையை ஏற்க வைக்க வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம். அதற்காக நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
பிரித்தானிய மக்களின் மனத்தினை வெல்வது மிக முக்கியமானது. அதற்கான தளத்தினை உருவாக்குவது தமிழர் பேரவையின் முக்கிய வேலைத்திட்டமாக இருக்கின்றது. கோஷங்களுக்குள் மட்டும் எமது போராட்டம் நின்று விடுதல் ஆகாது. தமிழர்களின் அழியாச் சொத்தான அறிவை ஆயுதமாக பயன்படுத்தி எதிரியை நாம் புறமுதுகிட செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்குள் மட்டும் இப் போராட்டத்தின் நியாயப்பாடு முடங்கி நிற்கக் கூடாது. நடைமுறையில் செய்து காட்டி முன்னேற வேண்டும் என்பதே எம் அணுகுமுறை.
இந்தப் பாதை தவறென்று யாராவது கருதுவீர்களாயின் விடுதலைக்காக இதனை விட மேலான மூலோபாயத்துடன் வேறொரு வடிவத்தில் செயல்பட்டு விரைவில் உலக அங்கீகாரத்தை எடுத்துத் தருவோம் என்று எமக்கு புதியதோர் பாதையினைக் காட்டுவீர்களானால் அதனை ஆராய்ந்து ஏற்றுக் கொண்டு உங்கள் பாதையில் இணையவும் நாம் தயாராகவுள்ளோம். விடுதலைக்கான உங்கள் பாதையினை மக்களுக்கும் எமக்கும் அறியத் தாருங்கள்.
தமிழீழத்தில் நடைபெற்ற அநீதிகளுக்கு ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை மூலம் நீதி வழங்க வேண்டும்இ அதற்காக சர்வதேச அரங்கில் பிரித்தானியா எமக்காக குரல் கொடுக்க வேண்டுமென பேரவை கடந்த ஐந்து வருடங்களாக பாடுபட்டு வருகின்றதுஇ அதன் பலனாக இன்று பிரித்தானியா சர்வதேச சுயாதீன விசாரணைக்கு சாதகமாக வெளிப்படையாக குரல் கொடுக்கின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பு போற்றுதற்குரியது. சர்வதேச அரசியல் நுணுக்கங்களை கற்றறிந்துஇ அதன் போக்கினை அறிந்து எமது போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச அரங்குகளுக்கு கொண்டு செல்வதில் பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் ஆற்றும் பணி நம்பிக்கை ஒளியைத் தருகின்றது. இவ்வாறு மேன்மேலும் இளைஞர்களை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வென்றெடுப்பதற்காக அரசியல் இராஜ தந்திர பணிகளை முன்னெடுப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
மாறாக போற்றுதற்குரிய பணிகளை ஆற்றக்கூடிய இளையோரில் ஒரு சிலரை தவறாக வழிநடாத்தி அமைப்புக்கள் மீதான போட்டி மனப்பான்மையினயும் காழ்ப்புணர்வுகளையும் தூண்டி அவர்களின் ஆற்றலையும் திறமைகளையும் தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் எமது இனத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டாமெனவும் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டோர்களுக்கு தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.
அதேவேளை தமிழர் பேரவையை இன்னும் சிலகாலத்துக்குள் நிர்மூலமாக்கிவிடுவோம் எனவும் எமக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையை எவ்வாறாயினும் ஒழித்துக்கட்டி விடவேண்டுமென அது தொடங்கிய காலம் தொடக்கம் இலங்கை அரசு பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றது. இலங்கை அரசினதும் மற்றும் பலரினதும் தொடர்ச்சியான கபட நாடகங்களுக்கு மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து வருகின்றதுஇ வளர்ந்துவருகின்றது
நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி பதிவு செய்துவிட்டோம்இ நாம் இழந்த சுதந்திரத்தை மீட்கும் பணிகள் ஆயிரமாயிரமாகக் கிடக்கின்றன. அன்றாடம் எமது உறவுகள் கொல்லப்பட்ட வண்ணம் உள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்குள் குரோதத்தை வளர்ப்பதும் இளைய சமூகத்தை கூறுபடுத்தி தவறாக வழிநடாத்துவதும் ஒற்றுமையைத் தகர்ப்பதுவும் விடுதலை வேண்டி நிற்பவர்கள் செய்யும் பணியல்ல.
தமிழர் பேரவை தேசியத்தின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் எந்த இடர்வரினும் அதனை எதிர் கொள்ளும் பக்குவமும் மனோதிடமும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் எம் மக்களுக்கும் உண்டு.
முள்ளிவாய்க்கால் நினைவென்பது மனித இனத்துக்கு எதிரான ஓர் மாபெரும் அவலத்துக்கான நீதி கேட்கும் நாள். இதற்கு வேறு விதமாக அர்த்தம் ஏதும் கற்பிக்க முடியாது. இந்நிகழ்வை தமிழினம் மட்டும் தனித்து நின்று முன்னெடுக்காமல் எமக்காக குரல் கொடுப்போர் மற்றும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் எனப் பலரும் சேர்ந்து ஒன்றாக அணி திரள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
‘துரோகி’களுக்கு எதிராக வங்காளிப் புலியும் ரஷ்யன் ஏ.கே யும் : சோளன்