கடந்த ஒன்பது வருடங்களாக இலங்கைச் சட்டங்களுக்கு முரணாக யாழ்ப்பாணச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஜெலீபன் சிவராசா சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவந்தார். நேற்று 11.12.2015 கொழும்பிற்கு அவர் மாற்றம் செயப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க – ஐரோப்பிய ஏகபோக அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப நியமிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசின் பேரினவாத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுப்பதில்லை.
இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்ட பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி போன்ற பல தலைவர்களின் இன்றைய நிலை தொடர்பான தகவல்களைக் கூட வழங்க மறுகும் பேரினவாதப் பாசிச அரசு கைதிகளை விடுதலை செய்ய மறுப்பதன் ஊடாக சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தூண்டிவிடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றது.
இலங்கையை முழு அளவில் சூறையாட ஆரம்பித்திருக்கும் பல் தேசிய வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட ஆரம்பித்தால், பேரினவாத்தைத் தீயை மூட்டுவதற்கு இலங்கை அரசு தயார் நிலையிலுள்ளது என்பதை கைதிகளதும், காணாமல் போனவர்களதும் விவகாரங்களில் அரசு நடந்துகொள்ளும் முறை தெரிவிக்கிறது.