Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி. கைதுசெய்யப்பட்டாரா? தன்னிச்சையாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டாரா?

 
   விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தற்போது பரவலாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கே.பி. கைதுசெய்யப்பட்டதாக மலேசியா மற்றும் தாய்லாந்து காவல்துறையினர் உத்தியோகபுர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

கே.பி.சர்வதேச காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டாரா அல்லது இலங்கை அதிகாரிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் இலங்கை வந்தாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
 
 
  மலேசியாவின் ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் கே.பி. இருந்த போது கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்தது.
கே.பி.யைக் கைதுசெய்வதற்கு இலங்கையைவிட இந்தியாவிற்கே அதிக தேவைகள் காணப்பட்டன. இதற்காகவே சர்வதேச காவல்துறையினர் ஊடாக இந்தியா கே.பி.க்கு பிடிவிராந்து உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், மலேசியா அல்லது தாய்லாந்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட கே.பி., ஏன் இந்தியா அரசாங்கத்திடம் ஒப்படைக்காது, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தது என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.

இவ்வாறு, சர்வதேச காவல்துறையினர் அல்லது தாய்லாந்து, மலேசிய காவல்துறையினரால் கே.பி. கைதுசெய்யப்பட்டிருந்தால், ஏன் இதுவரை அவர்கள் அதனை உத்தியோகபுர்வமாக அறிவிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லையென்பதும் மற்றுமொருவிடயமாகும்.

இதுகுறித்து ஆராயப்பட்ட தகவல்களின் போது கிடைக்கப்பெற்ற மிகவும் இரகசியமான தகவலொன்றின்படி, இலங்கை அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலருடன் தொலைபேசிமூலமாக ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய கே.பி. தன்னிச்சையாக ஆஜரானதாகத் தெரியவருகிறது.

இதனடிப்படையில், எதிர்வரும் சில வாரங்களில் கே.பி, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராளியாக இருந்த கருணாவைப் போன்று அரசாங்கத்துடன் இணைந்து ஜனநாயகத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரியவருகிறது.

இதனடிப்படையாகக் கொண்டே, இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக தாம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, ஜனநாயக ரீதியாக செயற்படப் போவதாக ஏற்கனவே கே.பி. அறிவித்துள்ளார் எனவும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.

எவ்வாறாயினும், கே.பி. கைதுசெய்யப்பட்ட முறை மற்றும் அவர் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விதம் தொடர்பாக எவ்விதத் தகவலையும் இலங்கை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, தாம் இவ்வாறான நபரொருவரை கைதுசெய்யவில்லையென தாய்லாந்து காவல்துறையினர் அல்ஜசீரா ஊடகத்திற்கு உறுதிசெய்துள்ளனர்.

Exit mobile version