Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி இன் சேவை:அயோக்கியர்களின் புகலிடம்

kp1அயோக்கியர்களுக்கு குற்ற உணவு ஏற்படும் போது அவர்களில் தஞ்சமடைவது தன்னார்வ நிறுவனங்களில் தான். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து அவர்களை இலவச சேவைகளின் அடிமைகளாக்கிவிடுகிறது. பல்தேசிய வியாபார நிறுவனங்கள், ஏகாதிபத்திய அரசுகள், உள்ளூர் அரசுகள் போன்றவற்றின் பண முதலீட்டில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் சேவை என்ற பெயரில் நடத்தும் அழிவு அரசியல் இலங்கை முழுமையையும் ஆட்கொண்டுள்ளது. இந்த வகையில் முன்னை நாள் புலிப் பிரமுகரும், சர்வதேச கிரிமினலும் இன்றைய உளவாளியுமான கே.பி என்ற குமரன் பத்மநாதன் அனாதரவான சிறுவர்களின் இல்லங்கள் என்று வன்னிப்பகுதியில் ஏற்படுத்திவருகிறார்.

ஒரு புறத்தில் இலங்கை அரச பாசிசம் இராணுவக் குடியிருப்புக்கள், இராணுவப் பொருளாதாரம், திட்டமிட்ட பல்தேசிய நிறுவனங்களின் நிலப்பறிப்பு, பாலியல் வன்முறைகள் போன்றவற்றினூடாகத் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை நடத்தி வருகிறது.

மறுபுறத்தில் கே.பி போன்றவர்கள் சேவை என்ற தலையங்கத்தில் போராட்ட உணர்வுள்ளவர்களையும், மக்கள் பற்றுள்ளவர்களையும் சேவை என்ற பெயரில் உள்வாங்கிக் கொள்கின்றனர்.

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற பலர் இந்தச் ‘சேவை’ வலைக்குள் விழுந்து இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பிற்கு மறைமுக அங்கீகாரம் வழங்கி வருகின்றனர்.

கே.பி, நெர்டோ என்ற அமைப்பைத் தோற்றுவித்து நடத்தி வருகிறார். புலம் பெயர் தமிழர்கள் பலர் இலங்கை அரச உளவாளியான கே.பி உடன் இந்த அமைப்பிற்குச் சேவை என்ற பெயரில் இணைந்து செயற்படுகின்றனர்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உள்ளூர் உளவாளிகள் கூட உருவாக்கலாம் என்பதற்கு நெர்டோ ஒரு சிறந்த உதாரணம். இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு நேரடிக்காரணமாகவிருந்த கே.பி இன் இரத்தக் கறைபடிந்த கரங்களைக் குழந்தைகளின் கண்ணீரால் கழுவ முற்படுவது சேவையல்ல. மீண்டும் ஒரு காட்டிக்கொடுப்பு.

கே.பி இன் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி:

நெர்டோ நிறுவன செயலர் கே.பி. என்று அழைக்கப்படும் திரு.செல்வராசா-பத்மநாதன் அவர்களால் கிளிநொச்சியில் ஆண் சிறுவர்களுக்கான செஞ்சோலை சிறுவர் இல்லம் 16-04-2014 அன்று காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை பீடாதிபதி பேராசிரியர் திரு.கே.தேவராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மற்றும் விருந்தினர்களாக
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேள்,
கனடாவில் இருந்து திரு திருமதி இராஜதுரை
யாழ். சிறீ நதியா ஜீவலர்ஸ் உரிமையாளர் என்.சத்யரூபன்
யாழ். ஹரிகணன் அச்சக உரிமையாளர் எஸ்.ராஜ்குமார்
ஒட்டுசுட்டானில் உள்ள புறமோர்ட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறேசன் பெர்ணான்டோ
ஓட்டுசுட்டானில் உள்ள புறமோர்ட்டர்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் இந்திக யாகண்டவெல
யாழ். சேர்வீஸ் நிலைய உரிமையாளர் ரி.புஸ்பகரன்
யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த செல்வி எஸ்.ஞானலோஜினி
யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த போட்டோ சிறீ உரிமையாளர் எஸ்.மீரா
லண்டனில் இருந்து திரு கதிரவேலு கோமலேஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் இருந்து இ.தயாபரன்
சர்வமத பெரியோர்களான கிளிநொச்சி மாவட்ட அருட்தந்தை எம்.கான்ஸ்போவர்
கிளிநொச்சியினைச் சேர்ந்த சிவத்தமிழ் வித்தகர் அமுத லக்ஸ்மி காந்த குருக்கள்
ஆகியோர் ஆசியுரை வழங்கினர்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
வருகை தந்தோரை திரு.பத்மநாதன் அவர்கள் இன்முகத்துடன் வரவேற்றார். மலர்ச்செண்டும், நிகழ்வின் அடையாள சின்னமும் கொடுக்கப்பட்டு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து முல்லைத்தீவு முத்தையன்கட்டு அன்பு இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்களின் காவடி, நடன நிகழ்வுகளுடன் நாதஸ்வர மேளவாத்தியம் முழங்க விருந்தினர்கள் “செஞ்சோலை சிறுவர் இல்லம் (ஆண்கள்)” கல்வெட்டு திரைநீக்கம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விளக்கேற்றி விபூதி, சந்தனம் கொடுத்து கனடாவை சேர்ந்த திரு.சரத் சந்திரன் அவர்களால் வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வுகளை விறுவிறுப்பு இணையத்தள பிரதம ஆசிரியர் திரு.ரிசி அவர்கள் தொகுத்து வழங்க விருந்தினர்களால் மங்கல விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடி, நெர்டோ கொடி, செஞ்சோலை கொடி ஆகியவற்றை முறையே பிரதம விருந்தினர்
திரு.கே.தேவராஜா, திரு.இராசதுரை, திரு.சரத் சந்திரன் ஆகியோர் ஏற்றினர்.
இதனைத் தொடர்ந்து நெர்டோ நிறுவனத்தின் செயலர் திரு.செல்வராசா பத்மநாதன் அவர்களால் ஆண் சிறுவர்களுக்குரிய செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டு சிறுவர் இல்லம் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதம விருந்தினர் அவர்களாலும், இவ் இல்லத்தை கட்டிமுடிக்க பலவழிகளிலும் உதவியோர்களாலும், விருந்தினர்களாலும் இல்லத்தின் மற்றைய கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டது.
முதலில் உணவு கூடத்தை பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு.கே.தேவராஜா அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்க இந்திக யாகண்டவெல நாடாவை வெட்டி திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கனடா ஈழநாடு பத்திரிகை ஊடாக கனடாவாழ் தமிழ் மக்களின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சமையல் கூடத்தையும், களஞ்சிய அறையையும் திரு.சரத் சந்திரன் அவர்கள் திரைநீக்கம் செய்துவைத்தார்.
தொடர்ந்து அமரர் ஆனந்தவேல்(வல்வெட்டித்துறை) ஞாபகார்த்தமாக திரு.சிவகுமார் அவர்களின் நிதியுதவியில் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் முதலாவது கட்டடத்தொகுதியை கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளர் திரு.க.முருகவேல் அவர்கள் திரைநீக்கம் செய்துவைக்க, சிறுவர் நன்னடத்தை அதிகாரி திரு.ராஜன் அவர்கள் நாடாவை வெட்டித் திறந்துவைத்தார்.
அடுத்து லண்டனைச் சேர்ந்த திரு.சி.சிவகாந்தன் அவர்களின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் இரண்டாவது கட்டடத் தொகுதியை யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த வழங்கறிஞர் எஸ்.ஞானலோஜினி அவர்கள் திரைநீக்கம் செய்துவைக்க, பாரதி இல்லத்தின் முகாமைத்துவ குழு உப தலைவர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்.
கம்பர்மலை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தம்பு வல்லிபுரம் சோதிடர் ஞாபகார்த்தமாக யாழ். சேர்வீஸ் நிலைய உரிமையாளர் திரு.த.புஸ்பகரன் அவர்களின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான தங்கும் இடத்தின் மூன்றாவது கட்டடத் தொகுதியை திரு.த.புஸ்பகரன் அவர்களே திரைநீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அச்சுவேலி வடக்கு அமரர்களான திரு.திருமதி.தங்கவேலாயுதம்-
சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக கனடாவைச் சேர்ந்த திருமதி.இராஜதுரை-தெய்வீகராணி அவர்களின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட அலுவலகத்திற்கான கட்டடத்தொகுதியை திருமதி.இராஜதுரை-தெய்வீகராணி அவர்கள் திரைநீக்கம் செய்துவைக்க திரு.இராஜதுரை அவர்கள் நாடாவை வெட்டி திறந்துவைத்தார்.
தொடர்ந்து பிரதம விருந்தினராலும், விருந்தினர்களாலும் மரம் நாட்டுதல் நிகழ்வு இடம்பெற்றது.
பின்னர் மண்டப நிகழ்வுகளுக்காக விருந்தினர்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
திரு.ரிசி அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து,
கிளிநொச்சி மாவட்ட அருட்தந்தை எம்.கான்ஸ்போவர்
கிளிநொச்சியினைச் சேர்ந்த சிவத்தமிழ் வித்தகர் அமுத லக்ஸ்மி காந்த குருக்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள ஏன்ஜல் சர்வதேச பாடசாலையின் அருட்தந்தை சாம்சன் இராஜசூரியர்
ஆகியோரின் ஆசியுரையுடன் மண்டப நிகழ்வுகள் ஆரம்பித்தன.
தொடர்ந்து செஞ்சோலை சிறுமிகள் தமது சிறப்பான வரவேற்பு நடனத்தை வழங்கி அனைவரையும் மகிழ்வித்து வரவேற்றனர்.
அடுத்து நெர்டோ நிறுவன செயலர் திரு.செ.பத்மநாதன் அவர்களால் உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து உரையாற்றியதுடன் ஆண் சிறுவர்களுக்குரிய செஞ்சோலை சிறுவர் இல்லத்தை உருவாக்க ஊக்கம் தந்தும், அதற்கு பல வழிகளிலும் உதவி நின்றவர்களுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளதாக தனது உரையில் குறிப்பிட்டார்.
ஆண் சிறுவர்களுக்குரிய செஞ்சோலை சிறுவர் இல்ல கட்டடம் கட்டவென உதவி செய்யுங்கள் என்று போய் கதைத்தவுடன் “உங்களுக்கு என்ன தேவை…..” என கேட்டு எல்லாவிதத்திலும் உதவி புரிந்தவர்களின் எண்ணங்களையும் குறிப்பிட்டு பெருமிதமடைந்தார்.
பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு.கே.தேவராஜா அவர்கள் தனது விரிவுரையாளர் என பெருமை பொங்க உரையாற்றியதுடன் பேராசிரியர் என்ற வட்டத்தை தாண்டி அவரின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தினார். இதில் தனது எண்ணத்திற்கேற்க கட்டடம் கட்டுவதில் உதவிபுரிந்த தன்னுடன் நின்றவர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். திரு.குமுதன் அவர்களுக்கு சிறப்பான அன்பையும், நன்றிகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து பாரதி சிறுவர் இல்லத்தின் சிறுவர்களால் அழகானதும் நேர்த்தியானதுமான நடனம் ஒன்று நிகழ்த்தப்பட்டது.
செஞ்சோலை சிறுமிகளின் அழகாக உடையலங்காரத்துடனான நளினமான நடனம் அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த திரு.சரத் சந்திரன் அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது. இவர் மூன்று இல்லங்களின் உருவாக்கத்திலும், சிறுவர்களை உள்வாங்குவதில் உழைத்தவர் என்ற வகையில் இல்லங்களுக்கு சிறுவர்கள் வந்தபோது அவர்களின் ஏழ்மை நிலை, கல்விப் பற்றாக்குறை போன்றவற்றை குறிப்பிட்டு எல்லோருடைய நெஞ்சங்களையும் தொட உரையாற்றினார். இப்போது இல்ல சிறுவர்களின் கல்வித்தராதரம் உயர்ந்திருப்பதை பரீட்சை புள்ளிகளுடன் குறிப்பிட்டு கதைத்ததுடன் சிறுவர்களின் மகிழ்ச்சி பற்றி மகிழ்வாக உரையாற்றினார்.
அடுத்து விருந்தினர்களால் ஆசியுரையும், சிற்றுரைகளும் ஆற்றப்பட்டன.
செஞ்சோலை சிறுமி இசைச்செல்வியின் இனிமையான பாடலை அடுத்து பாரதி இல்ல சிறுமிகளின் அழகான நடனம் இடம்பெற்றது.
அடுத்து பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு.கே.தேவராஜா அவர்கள் தனது உரையில் திரு.பத்மநாதன் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றி குறிப்பிட்டு கதைத்ததுடன், திரு.பத்மநாதன் அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்தினார். இன்றைய சிறுவர்களின் புத்திக் கூர்மையை குறிப்பிட்டு கதைத்ததுடன் அவர்களுக்கேற்ப நாம் எம்மை மாற்றிக்கொண்டு செயற்படவேண்டும் என்பதை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த திரு.பாலபாலசிங்கம்-யோகம்மா குடும்பத்தினரால் செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட முச்சக்கரவண்டியை செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் நிர்வாகி செல்வி.சிறி நிரோசா அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து செஞ்சோலை முகாமைத்துவ உறுப்பினர் திரு.கந்தசாமி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
இந்த இல்ல உருவாக்கத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் மாத்திரமன்றி யாழ்ப்பாண வர்த்தகர்கள் உட்பட வன்னியைச் சேர்ந்த வர்த்தகர்கள் பெரும் பங்களிப்பினை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முத்தையன்கட்டில் அன்பு ஆண் சிறுவர் இல்லம், முள்ளிவளையில் பாரதி பெண் சிறுவர் இல்லம், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவில் செஞ்சோலை பெண் சிறுவர் இல்லம் மற்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு உள்ள செஞ்சோலை ஆண் சிறுவர் இல்லம் ஆகியன நெர்டோ நிறுவன செயலர் செல்வராசா பத்மநாதனால் ர்வகிக்கப்படுகின்றது.

பின் – புலி அரசியல் – NGO களின் பொற்காலம் : சபா நாவலன்

Exit mobile version