Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி இன் இரகசிய புலம்பெயர் தொடர்பாளர்கள்

மகிந்த ராஜபக்ச தலைமையில் புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுகளை ஆரம்பிக்க உள்ளதாகத் இலங்கை ஊடக அமைச்சர் ரம்புவெக்கல தெரிவித்திருந்தார். தவிர, இலங்கையில் நிரந்தர சமாதானம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சமாதான முயற்சியில் கே.பி இன்னும் பிரதான பாத்திரம் வகிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிறீ லங்கா கார்டியன் பத்திரிகை மின்னஞ்சல் தொடர்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கே.பி உடன் தொடர்புடைய மூலம் ஒன்றின் ஊடாக மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய பகுதிகள் தமிழில் எழுதப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
அதன் சாராம்சம் வருமாறு:
‘கே.பி இன் ஊடாக மற்றோரு முறை புலம்பெயர் தமிழர்கள் சிலரை கொழும்பிற்கு அழைத்து மகிழ்ச்சிப்படுத்த இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் ஜீரிவி உரிமையாளர் செல்வி, நாடுகடந்த தமிழ் ஈழத்தின் நிதி அமைச்சர் இளையதம்பி செல்வநாதன், சபாநாயகர் பொன் பாலராஜன், நோர்வேயைச் சேர்ந்த சர்வே ஆகியோர் ஊடாக பேச்சுக்களை இலகுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ருத்திரகுமாரனுக்கு தெரியாமலே திரை மறைவில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பேச்சுக்களில் ஈடுபடுவோரின் பட்டியலை அவர்கள் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசின் தூதர் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்குச் சென்று பின்னர் கனடாவிற்குச் சென்று அங்கு கே.பி இன் தொடர்பாளர்களோடு பேச்சு நடத்தி இலங்கை திரும்பியுள்ளார்.’
இந்த மின்னஞ்சலில் உண்மைத் தன்மை குறித்து இனியொருவிற்கு எந்த ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை. சிறீலங்கா கார்டியன் இணையம் இது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. எது எவ்வாறாயினும், இலங்கை அரசு பல தளங்களில் தனது வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது.
அண்மையில் பிரான்சிலிருந்து இலங்கை அரசை விமர்சிக்கும் ஒருவர் தாயாரின் மரணச் சடங்கிற்கு இலங்கை சென்று திரும்பியிருந்தார். குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே அவர் பிரான்ஸ் திரும்பியிருந்த நிலையில் திவயின பத்திரிகையில் இலங்கைக்கு ‘புலி சார் இடதுசாரி’ பிரான்சிலிருந்து இலங்கை சென்று திரும்பியதாக செய்தி வெளியாகியிருந்தது. முப்பது வருட ஈழப் போராட்டத்தின் விழை நிலத்தில் தியாகிகளோடும், புரட்சியாளர்களோடும் போட்டிபோட்டுக்கொண்டு மனநோயாளிகளும் காட்டிக்கொடுப்பாளர்களும் முளைத்திருக்கிறார்கள்.

Exit mobile version