Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேரள பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்

கேரள பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்
 கேரள மாநில கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இடம் பெற்றுள்ளதால், அதனை திரும்ப பெறக் கோரி பிரதான கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இதையடுத்து, கேரள மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது. கேரள மாநிலத்தில் 7-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பற்றி உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பாடத்தை அந்தப் புத்தகத்திலிருந்து நீக்குவதுடன், புத்தகத்தையே திரும்ப பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இதனை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பாஜக ஆதரவு: மற்றொரு முக்கிய கட்சியான பாஜகவும், இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேசிய கல்வித் துறை அமைச்சர் பேபி, “அந்தப் புத்தகத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஆட்சேபத்துக்குரிய பகுதி இருப்பின், அது குறித்து வேண்டுமானால் அரசு பேச்சு நடத்தத் தயார்’ என தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள், தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதையடுத்து, ஆளும் இடதுசாரி கட்சியின் மாணவர் அமைப்பும் பதிலுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மோதலில் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இடதுசாரிகள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸ்காரர்கள் மற்றும் செய்தியை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கர்கள் தாக்கப்பட்டனர்.
இவ்விவகாரம் அம்மாநில சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது. அரசின் இந்த அணுகுமுறையைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தன.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், இவ்விவகாரத்தில் ஆளும் இடதுசாரி அரசு செய்வதறியாமல் திகைத்துப் போயுள்ளது.
முஸ்லிம் லீக் போராட்டம்: சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

Exit mobile version