அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் நாளை புதன்கிழமை இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவின் மும்பை நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை வெளிக்காட்டும் முகமாக ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் உத்தரவின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெறும் நேட்டோ கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக பிரிட்டனுக்குச் சென்றுள்ள ரைஸ் அதன் தொடர் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
இந்திய மக்களுக்கு பக்கபலமாக இருப்பதனையும் தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைளை இருநாடுகளும் இணைந்து முன்னெடுப்பதையும் வெளிக்காட்டும் முகமாகவே இவ்விஜயம் அமைந்துள்ளதாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்காக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.அமைப்பை மீளமைக்குமாறு அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் இராணுவ மற்றும் புலனாய்வு சிரேஷ்ட அதிகாரிகள் பாகிஸ்தான் அரசைக் கேட்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக இந்திய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் இருநாடுகளுக்குமிடையேயான அணுத்திட்ட பதற்ற நிலையைக் குறைப்பதற்கான பேச்சுகளில் ரைஸ் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கான இவ்விஜயமானது அப்பேச்சுகளுக்கு மேலும் வலுச்சேர்க்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்த ஜனாதிபதி புஷ் மும்பைத் தாக்குதலில் பலியானவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவின் அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் 5 அமெரிக்கர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பிரதமருடனான தொடர்பின் போது ஜனாதிபதி புஷ் இச்சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவுக்கு தேவையான சகல உதவிகளையும் மனித வலுக்களையும் வழங்குமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சாளரான கோர்டன் ஜோன்ட்ரோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரோமில் நடைறெவிருந்த கூட்டத்துக்கான அழைப்பையும், ஐரோப்பிய ஒன்றிய விஜயத்தையும் இரத்துச் செய்தபின் தானாகவே இந்தியாவுக்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க அரசின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும், இக்கட்டானதொரு சூழ்நிலையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வது மிகவும் முக்கியமானதுடன் இந்திய அரசுக்கு நேரடியாக அனுதாபங்களை தெரிவிப்பதும் முக்கிய நோக்கமெனவும் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்தியாவில் கவலை தரும் விடயமாகவே இருந்தாலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவுக்கு உதவுவதும் அமெரிக்காவின் நோக்கமென கூறப்பட்டுள்ளது.