Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூட்டமைப்பிற்கு ஆதரவு : நாடுகடந்த தமிழீழமும், பேரவையும் அரசியலிலிருந்து விலகத் தயாரா?

ஜெயலலிதா முதலமைச்சர் பதவிக்குப் போட்டி போட்ட வேளையில் கருணாநிதியின் காட்டிக்கொடுப்பிற்கு எதிராக ஜெயலலிதாவை ஈழத் தாய் எனச் சித்தரித்தவர்கள் புலம் பெயர் குறும் தேசியவாத கோமாளிகள். ஆயிரமாயிரம் மக்களின் உயிர்களோடும் அவலங்களோடும் அரசியல் பேசும் இவர்கள் மத்தியிலுள்ள பிழைப்பு வாதிகள் ஒரு புறத்திலும் கோமாளிகள் மறு புறத்திலுமாக மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு அடிப்படை எதிரியான ஜெயலலிதாவை ஆதரித்தனர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழீழத்தை வாங்கிவிட்டதான குதூகலத்தில் வாழ்த்துக்களை அனுப்பினர். ஜெயலலிதா ஆட்யில் அமர்ந்து சரியாக ஒரு மாதத்துள் பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலை நடத்த உத்தரவிட்டார். ஈழ அகதிகளின் முகாம்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. மூவரின் தூக்குத்தண்டனைக்கு ஆதரவளித்தார்.

வாழ்த்துக்களை அனுப்பியவர்களும் ஆதரவளித்தவர்கள்களும் எதுவும் நடக்காதது போல் மௌனமாகினர். சோனியா காந்தி பிரிட்தானியாவிற்கு வந்த போது, அவரின் கண்களில் ஒளி தெரிவதாக உலகத் தமிழர் பேரவை அறிவித்தது. சோனியா காந்தி இலங்கையில் நடந்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றதும் பேரவை மௌனமாகிவிட்டது. மக்களை மந்ததைகளாக்கும் இந்தக் குழுக்கள் உலகம் முழுவதும் போராடும் மக்கள் பகுதிகளிடமிருந்து ஈழத் தமிழர்களை அன்னியமாக்கி போராட்டத்தைத் தனிமைப்படுத்துகின்றனர். போராடும் நேர்மையான மக்கள் சக்திகளுக்கு ஈழத்தமிழர்களைச் சந்தர்ப்பவாதிகள், அரசியல் வியாபாரிகள் என்ற விம்பத்தை வழங்குகின்றனர்.

இப்போது கம்பபன் கழகம் புகழ் சி.வி.விக்னேஸ்வரனதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தவணை முறை.
இதே உலகத் தமிழர் பேரவையும் நாடுகடந்த தமிழீழமும் விக்னேஸ்வரனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவாதாகத் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ‘ராஜபக்ச ஜனநாயகத்தின்’ கீழ் வாக்களிக்கக் கோரியுள்ளனர். மக்களின் வாழ்வோடும் உயிரோரும் விளையாடும் இவர்கள் பிழைப்புவாதிகளா அன்றி அப்பாவிகளா என்ற ஆய்வுகள் முக்கியமற்ற விவாதம்.

தேர்தலில் வெற்றி பெற முன்பதாகவே விக்னேஸ்வரனின் திருவிளையாடல்கள் இந்திய அரசின் மொழியைப் பேசுகின்றன. விக்னேஸ்வரன் ஆட்சிக்கு வந்ததும் இலங்கை இந்திய அரசுகளில் அடியாள் போல செயற்பட்டால் பிரித்தானியத் தமிழர் பேரவையும் நாடுகடந்த தமிழீழமும் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளத் தயாரா? மக்களை மேலும் மேலும அவலத்தில் அமிழ்த்துவதற்காக அரசியலிலிருந்து இவர்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

Exit mobile version