கூடங்குளம் அணு உலை தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள மத்திய குழுவினர், இன்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்து:ககு வந்தனர். அவர்களுடன் போராட்ட குழுவினரும், மாநில குழுவினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பிறகு, வெளியே வந்த போராட்டக் குழு உறுப்பினர் புஷ்பராயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு மற்றும் அணு உலை அமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதோடு, 50 கேள்விகளை மத்திய குழுவினர் முன்னிலையில் நாங்கள் வைத்துள்ளோம். அதற்கு அவர்கள், கூடங்குளம் அணு மின் உலையை நாங்கள் பார்வையிடவில்லை. அதற்கான ஆவணங்களும் எங்களிடம் இல்லை. எனவே அணுமின் உலையை ஆய்வு செய்த பின்னர், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றனர். அவர்களிடம் நாங்கள் மக்களிடம் வந்து, நீங்கள் இதுதொடர்பாக பேச வேண்டும் எனற கோரிக்கை வைத்தோம். அதற்கு கமிட்டியினர் எங்களுக்கு அந்த அதிகாரம் மற்றும் மக்களுடன் பேசுவதற்கும் இப்போது சூழ்நிலை தகுந்தாற்போல் இல்லை. மேலும் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகளை கலந்து ஆலோசித்துவிட்டு, உங்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார். இதற்கு முன்னதாக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், அணுமின் நிலைய ஆதரவு தரப்பும், எதிர்பாளர்கள் தரப்பினரும் கோஷம் எழுப்பினர். இதே வேளை கூடங்குளம் போராட்டத்தில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான கொடுப்பனவு மேலை நாடுகளிலுள்ள அதிகார மையங்களிலிருந்தே வழங்கப்படுகின்றது. அவர்கள் நிதி பெற்றுக்கொள்வதற்குத் தடையான எந்தப்போராட்டங்களிலும் ஈடுபட மாட்டார்கள். பொதுவாக போராட்டங்களை மட்டுப்படுத்தி சமரச நிலையை ஏற்படுத்துவதே தன்னார்வ நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலாகும்.