Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் மின் உற்பத்தி – ஒரு நாடகம் அரங்கேறுகிறது : உதயகுமார்

uthayakumarகூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்  வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மின்சாரம் எங்கே போனது எனக் கேள்வியெழுப்பியுள்ளார். அறிக்கையின் விபரம் கீழே.

2011 டிசம்பர் மற்றும் 2012 மார்ச் என இருமுறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் விளக்கம் சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், தற்போது ரஷ்யாவுக்கு போயிருந்தபோது, கூடங்குளம் வெற்றி செய்தியை புதினுக்கு அளித்து, 3-4 உலைகளுக்கான ஒப்பந்தத்தையும் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.

“கூடங்குளத்தில் மின் உற்பத்தி” எனும் நாடகம் அரங்கேற தொடங்கியது. மன்மோகன் சிங் ரஷ்யாவுக்கு சென்ற கடந்த 20-ந்தேதி நள்ளிரவு 12.16மணிக்கு மின் உற்பத்தி செய்ய முயற்சி செய்து தோற்றுப்போன விபரம், தென் பிராந்திய மின் விநியோக மைய இணையதளத்தில் பதிவாகியிருக்கிறது.

கூடங்குளத்தில் வாழ்வா, சாவா என போராடிக்கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி துறை, இந்திய அணுமின் கழகம், பிரதமர் அலுவலகம், மத்தியஅரசு, காங்கிரஸ் கட்சி என அனைவரும் ஒன்றாக சேர்ந்து, பிரதமர் ரஷ்யாவை விட்டு வெளியேறும் நேரத்தில் அக்டோபர் 22-ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் மின்சாரத்தை மின்தொகுப்போடு இணைத்துவிட்டோம் என்று அறிவித்தனர். இரண்டாம் நிலை கோளாறுகளால் அந்த முயற்சியும் அன்றுகாலை 4.34மணிக்கு தோல்வியில் முடிந்தது.

நாட்டுமக்களின், ஊடகங்களின், சர்வதேச சக்திகளின் எதிர்பார்ப்பு ஏறிக் கொண்டிருந்த நிலையில், கூடங்குளம் நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் (25-ந்தேதி) இரவு 9.43மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கி விட்டதாக அறிவித்தார்கள். ஆனால் தமிழ்நாடு மின்கடத்தல் நிறுவனத்தின் இணையதளத்தில் நேற்று(26-ந்தேதி) காலை 7.50மணிக்கு கூடங்குளம் மின்சாரம் குறிப்பிடப்படவே இல்லை.

மத்திய உற்பத்தி நிலையங்கள் வரிசையில் கல்பாக்கம், காக்ரப்பார் அணுமின் நிலையங்களிலிருந்து வரும் தமிழகத்தின் பங்கான 331, 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியானால் கூடங்குளம் மின்சாரம் எங்கே போயிற்று? இப்படி ஓர் அரசு தன் மக்களை ஏமாற்றுமா? என்று பலரும் கேட்கிறார்கள்.

இந்த அரசின் பிரதமர் “ஓரிரு வாரங்களில் மின்சாரம் வரும்” என்று 2வருடங்களுக்கு முன்பே சொல்லவில்லையா? இவரின் அமைச்சர்தானே 89 முறை “இன்னும் 15 நாளில் மின்சாரம் வரும்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த அரசுதானே 275 முக்கியமான நிலக்கரி கோப்புக்களை காணவில்லை என்று சொல்கிறது. இந்த அரசுதானே 2ஜி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் போன்ற பிரச்சினைகள் பற்றி மக்களிடம் பொய்யும், புரட்டும் பேசிக்கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால், இந்திய அணுசக்தித் துறை எந்த நேரத்திலும் யாரிடமும் எந்த உண்மையையும் சொன்னதாக வரலாறே கிடையாது.

கூடங்குளத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான பூதங்கள் கிளம்பும். ஆக மொத்தத்தில் கூடங்குளத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது பரிசோதனைகள்தானே தவிர, முழு அளவிலான வணிக உற்பத்தி அல்ல. அது நடக்குமா, எப்போது நடக்கும் என்பவையெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். எனவே தான் கடந்த 25-ந்தேதி தமிழகத்தின் மின்சார நிலைமை பற்றி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், கூடங்குளம் மின்சாரத்தை பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்த பிழையோ, விடுபடவோ இல்லை. முதல்வருக்கு நன்றாகத் தெரியும். கூடங்குளத்தில் நடப்பது ஒரு நாடகமென்று. இந்த நிலையிலாவது தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

Exit mobile version